பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

புதுதில்லி: பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்(72) அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளரின் பெயர் வரும் புதன்கிழமைக்குள் (ஜூன் 21) அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதை முன்னிட்டு அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், பாஜக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட குடியரசுத் தலைவர் வேட்பாளரை எதிர்க்கட்சியினர் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்தச் சூழலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவரும் பிகார் ஆளுநருமான ராம்நாத் கோவிந்த் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை தில்லியில் நடைபெற்ற பாஜகவின் ஆட்சிமன்ற குழு கூட்டத்திற்கு பின்னர் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.

மேலும், குடியரசு துணை தலைவர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

1945, அக்டோபர் 1 ஆம் தேதி கான்பூரில் பிறந்த ராம்நாத் கோவிந்த், உத்தரப் பிரதேசத்தில் இருந்து இரண்டு முறை (1994 மற்றும் 2000) நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வழக்குரைஞரான இவர் மத்திய அரசின் வழக்குரைஞராக தில்லி உயர்நீதிமன்றத்தில் 1977 முதல் 1979 வரை பணியாற்றியவர். 1998ல் இருந்து 2002 வரையில் பாஜகவின் பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தேசிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2015 ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் பிகார் ஆளுநராக இருந்து வருகிறார்.

இவர் வரும் 23 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 28-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் 29-ஆம் தேதி பரிசீலிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவு அடுத்த மாதம் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com