பொதுப் பணித் துறையில் ஊழல்? ஆதாரங்களைத் தந்தால் விசாரணை: கேஜரிவால்

தில்லி பொதுப் பணித் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகி உள்ள நிலையில்,
பொதுப் பணித் துறையில் ஊழல்? ஆதாரங்களைத் தந்தால் விசாரணை: கேஜரிவால்

தில்லி பொதுப் பணித் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகி உள்ள நிலையில், அதுதொடர்பான ஆதாரங்களை தந்தால் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி பொதுப் பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு அதிக அளவு பணம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்திக்கு ஆதாரமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால், "முறைகேடு குற்றச்சாட்டு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் எனக்கு அனுப்பி வையுங்கள்; இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

தில்லி பொதுப் பணித் துறை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் உள்ளார். ஏற்கெனவே சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் சத்யேந்தர் ஜெயின் சிபிஜயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இந்த நிலையில் அவர் பொறுப்பு வகிக்கும் துறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.

கடந்த 2015}16 கால கட்டத்தில் சாலை, கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்காக பொதுப் பணித் துறை சார்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் கடந்த மாதம் 3 வழக்குகள் பதிவு செய்தனர். இதில் ஒரு வழக்கு, முதல்வர் கேஜரிவாலின் உறவினர் குமார் பன்சாலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏவுமான கபில் மிஸ்ரா, கேஜரிவால் மீதும் சத்யேந்தர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். கேஜரிவாலுக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்த கபில் மிஸ்ரா கூறி வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தில்லி அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  பொதுப் பணித் துறையில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கபில் மிஸ்ரா ஏற்கெனவே குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com