அமைச்சர் ரமாநாத் ராய் ராஜிநாமா செய்யக் கோரி சட்டப் பேரவை, மேலவையில் பாஜக அமளி

அமைச்சர் ரமாநாத் ராய் ராஜிநாமா செய்யக் கோரி சட்டப் பேரவை, மேலவையில் பாஜக அமளி

அமைச்சர் ரமாநாத் ராய் ராஜிநாமா செய்யக் கோரி, கர்நாடக சட்டப் பேரவை, மேலவையில் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ரமாநாத் ராய் ராஜிநாமா செய்யக் கோரி, கர்நாடக சட்டப் பேரவை, மேலவையில் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கர்நாடக சட்டப் பேரவை திங்கள்கிழமை தொடங்கியவுடன் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் கல்லடக்கி பிரபாகர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து, அவரை கைது செய்ய போலீஸாருக்கு வனத் துறை அமைச்சர் ரமாநாத் ராய் உத்தரவிட்டுள்ளார். இது போலீஸாரை தன்னிச்சையாகப் பணி செய்ய விடாத முயற்சியாகும்.
காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமைச்சர் முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அமைச்சர் தவறான தகவல்களை அவைக்கு தருகிறார்.
அண்மையில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களை தவறான பாதைக்கு அமைச்சர் கொண்டு செல்கிறார். எனவே அமைச்சர் ரமாநாத் ராய் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இதற்கு அவர் மறுத்தால், பதவி நீக்கம் செய்ய முதல்வர் சித்தராமையா முன்வர வேண்டும் என்றார்.
பாஜகவினர் அமளியும், காங்கிரஸ் உறுப்பினர்களின் பதிலும்..: இதற்கு ஆதரவு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கோவிந்தகார்ஜோள், போப்பையா, விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி, சுனில்குமார், அங்காரா, அப்பச்சுரஞ்சன் உள்ளிட்டோர் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
பாஜகவினரை கண்டித்து ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அபய்சந்திர ஜெயின், மொய்தீன்பாவா, லோபோ, அமைச்சர்கள் பிரமோத் மத்வராஜ், ரோஷன்பெய்க் உள்ளிட்டோர் குரல் எழுப்பினர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் ரமாநாத் ராய் பேசியதாவது:-
மதக் கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரை கேட்டுக் கொண்டேன். கல்லடக்கி பிரபாகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடவில்லை என்றார்.
இதன் பின்னரும், பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை பேரவைத் தலைவர் கே.பி.கோலிவாட் சமரசம் செய்து, 'அரசிடமிருந்து இதற்கு உரிய பதில் பெற்று தரப்படும்' என்றார். இதையடுத்து, அவர்கள் சமரசம் அடைந்தனர்.
சட்ட மேலவையில் பாஜகவினர் அமளி: இதேபோல், சட்ட மேலவையிலும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து, அமைச்சர் யு.டி.காதர், அரசு கொறடா ஐவான் டிசோசா உள்ளிட்டோர் குரல் எழுப்பினர். இதனால் மேலவையில் அமளி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் பேசியதாவது:-
கல்லடக்கி பிரபாகரின் பேச்சு மதகலவரத்தை தூண்டுவது போல் உள்ளது. எனவே அவரை கைது செய்யுமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சரான ரமாநாத்ராய் கூறியதில் தவறில்லை.
ஆனால் ரமாநாத்ராய் கூறியவுடன் பிரபாகரை போலீஸார் கைது செய்யவில்லை.
போலீஸாருக்கு சட்டவிதிகளுக்கு உட்பட்டே அனைத்தையும் செய்ய முடியும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்படி யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறுவது வாடிக்கை என்றார். இதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட பாஜகவினர் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com