குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் 22-இல் ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமையை எட்டுவதற்காக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 22-ஆம் தேதி
குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் 22-இல் ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமையை எட்டுவதற்காக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட, மத்தியில் ஆளும் பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 'குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக விவாதிக்க வரும் 22-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும்' என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரான நரேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
வாக்கு வங்கி அரசியல்: சிவசேனை தாக்கு
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு அக்கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியான சிவசேனை தனது ஆதரவை உறுதிப்படுத்தவில்லை. மாறாக, ராம்நாத் கோவிந்தின் தேர்வை அக்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், 'குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு தலித் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வெறும் வாக்கு வங்கி அரசியலே காரணம். அவரை ஆதரிப்பது குறித்த இறுதி முடிவை எங்கள் கட்சி செவ்வாய்க்கிழமை எடுக்கும்' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியதாவது: ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஒருவரை பாஜக அறிவித்துள்ளது. நாங்கள் இதை எதிர்க்கிறோம் என்றார் டி.ராஜா.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியியின் பொதுச் செயலர் சுரவரம் சுதாகர் ரெட்டி கூறுகையில், 'ராம்நாத் கோவிந்த் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். அவரை எதிர்த்து நாங்கள் (எதிர்க்கட்சிகள்) நிச்சயம் வேட்பாளரை நிறுத்துவோம்' என்றார்.
மம்தா ஆட்சேபம்
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ராம்நாத் கோவிந்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்வுசெய்திருப்பதற்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எத்தனையோ பெரிய தலித் தலைவர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, பாஜகவின் தலித் பிரிவுத் தலைவராக இருந்த காரணத்தாலேயே ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு பிரணாப் முகர்ஜி அல்லது அத்வானி அல்லது சுஷ்மாவை வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கலாம்.
ஒருவரை ஆதரிக்க வேண்டுமானால் அவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் 22-ஆம் தேதி விவாதிக்க உள்ளனர். அதன் பிறகே எங்களால் முடிவை அறிவிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் மம்தா கூறியுள்ளார்.
ஒருதலைப்பட்சமானது: யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்த பின் மீண்டும் எதிர்க்கட்சிகளுடன் பேசப் போவதாக பாஜக தலைவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவர்கள் மீண்டும் எதிர்க்கட்சிகளுடன் பேச வராமல், வேட்பாளரை அறிவித்துள்ளனர். இது ஒருதலைப்பட்சமானது.
எனவே, எதிர்க்கட்சிகள் வரும் 22-ஆம் கூடி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க உள்ளன.
கருத்தொற்றுமையை எட்ட அனைத்துஎதிர்க்கட்சிகளும் முயற்சிக்கும். ஒரு முறை தவிர, இதுவரை நடைபெற்றுள்ள எல்லை குடியரசுத் தலைவர் தேர்தல்களிலும் ஆளும் தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் வேட்பாளர்களை நிறுத்திய வரலாற்றை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகள் முடிவெடுக்கும் என்றார் சீதாராம் யெச்சூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com