குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த் (71) அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்த பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்.
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்த பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த் (71) அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ள அவர், பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு இருமுறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
பாஜக கூட்டத்தில் முடிவு: தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலையில் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ராம்நாத் கோவிந்தை பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதனை அமித் ஷா பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
23-ஆம் தேதி மனு தாக்கல்: தேசிய அளவில் பெரிதும் அறியப்படாத தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த், ஒரே நாளில் நாட்டின் முதன்மையான பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். அவர், வரும் வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
2-ஆவது தலித் தலைவர்: இதன் மூலம், இந்தியாவின் குடியரசுத் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் 2-ஆவது முறையாகத் தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் (1997-2002) முதல் முறையாக குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார்.
ஊகங்களுக்கு முடிவு: முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வந்தன. பாஜக வேட்பாளரை எதிர்த்து வலுவான தலைவரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வந்ததன. இது தொடர்பாக பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பல கட்டமாக ஆலோசித்து வந்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் மற்றும் ஹிந்துத்துவத் தலைவரை நிறுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி?: இந்நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைவரை பாஜக முன்னிறுத்தியுள்ளது. இதன் மூலம் கட்சி வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு பிராந்திய கட்சிகளின் ஆதரவு தங்கள் வேட்பாளருக்கு கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.
போட்டி வருமா? இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, ஜூலை 17-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, ஜூலை 20-ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது. ஒருவர் மட்டுமே போட்டியிட்டால், தேர்தல் நடத்தப்படாமல் அவரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை காங்கிரஸ் அல்லது வேறு கட்சிகளின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தேர்தல் நடத்தப்படும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக இருப்பார் - மோடி
ராம்நாத் கோவிந்த் வழக்கமான குடியரசுத் தலைவராக இல்லாமல் மிகவும் வேறுபட்டவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் இருப்பார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு சுட்டுரையில் அவர் கூறியதாவது:
நமது நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட, சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள, ஏழை, எளிய மக்களின் வலுவான குரலாக ராம்நாத் கோவிந்த் இருப்பார். நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் குறித்த முழுமையான ஞானம் கொண்ட அவரால் நாட்டுக்கு பல்வேறு நல்ல விஷயங்கள் கிடைக்கும். எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராம்நாத் கோவிந்த், தனது அறிவாலும், முயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்தவர். பொதுவாழ்க்கையின் பெரும் பகுதியில் ஏழை, எளிய மக்களின் நலன்காக்க உழைத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சோனியாவிடம் ஆதரவு கேட்டார்: வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
கருத்தொற்றுமைக்கு வாய்ப்பு இல்லை-காங்கிரஸ்
பாஜக அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து கருத்தொற்றுமை ஏற்பட வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இது தொடர்பாகக் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றுதான் காங்கிரஸ் விரும்பியது. ஆனால், பாஜக தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருப்பவர்கள் முதலில் பிற கட்சிகளுடன் வேட்பாளர் குறித்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், பாஜக தங்கள் கட்சிக் கூட்டத்தை நடத்தி வேட்பாளரை அறிவித்துவிட்டது. அவர்கள் இப்படி செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே, வேட்பாளர் குறித்த முடிவில் கருத்தொற்றுமை ஏற்பட வாய்ப்பு இல்லை.
அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
விவசாயக் குடும்பத்தில் இருந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் 1945-ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராம்நாத் கோவிந்த், கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.காம்., பட்டப்படிப்பும், பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார்.
பின்னர் தில்லி வந்த அவர் அங்கு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1974-ல் சவீதாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்: கடந்த 1977 முதல் 1979 வரை தில்லி உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின்னர் 1993-ஆம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தொடர்ந்தார்.
தொடக்கம் முதலே பாஜகவில் இணைந்து பணியாற்றிய அவர், 1998 முதல் 2002-ஆம் ஆண்டு வரை பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராக இருந்துள்ளார்.
இருமுறை எம்.பி: 1994-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2006-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்றக் குழு, உள்துறை, பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு, சமூக நீதி, சட்டம்-நீதி உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக, லக்னெள அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2002-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா. சபையில் உரையாற்றியுள்ளார்.
சர்ச்சையில் சிக்காதவர்: 1997-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிகார் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
பாஜக-வில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த ராம்நாத் கோவிந்த் எவ்வித சர்ச்சையிலும் சிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com