குடியரசுத் தலைவர் வேட்பாளர்: எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கவனித்து ராம்நாத்தைத் தேர்வு செய்தோம்: பாஜக

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்வு செய்தபோது, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டன
குடியரசுத் தலைவர் வேட்பாளர்: எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கவனித்து ராம்நாத்தைத் தேர்வு செய்தோம்: பாஜக

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்வு செய்தபோது, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டன என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ராம்நாத் கோவிந்தின் பின்னணி, சர்ச்சைக்கு அப்பாற்பட்ட பண்பு, சட்ட மற்றும் சமூகப் பின்னணி ஆகியவை காரணமாக அவரை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு எந்தக் காரணமும் இருக்காது என்று நம்புகிறேன். அவரை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பார்கள் என்றும் நாட்டின் குடியரசுத் தலைவராக அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்பதும் எனது நம்பிக்கையாகும். குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்வு செய்தபோது, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
கடந்த காலத்தில் நீலம் சஞ்சீவ ரெட்டி எதிர்ப்பே இல்லாமல் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் தேர்ந்தெடுப்பட்டபோது அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் ஒரு புரிதல் இருந்தது.
குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், பாஜக ஜனநாயக உணர்வுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் அணுகி ஆதரவு கோரியது என்றார் வெங்கய்ய நாயுடு.
எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டாக வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக இடதுசாரிக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ராம்நாத் கோவிந்துக்கு எதிராக வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, பாரிபா பகுஜன் மகாசங்கத்தின் தலைவரும், அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் யஷ்வந்த், காந்தியடிகளின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோரின் பெயர்களை எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.
அதிகம் அறியப்படாத தலித் தலைவரான ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்த பாஜகவின் முடிவு எதிர்க்கட்சிகளை ஆச்சரியப்படுத்தவில்லை.
ஏனெனில் பாஜக முதல் முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிக்கு மிக அருகில் உள்ளது. எனவே அது இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாது. எனினும், நாங்கள் (எதிர்க்கட்சிகள்) போட்டியிடுவோம்.
எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டாக வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். பாஜக தலித் வேட்பாளரை அறிவித்துள்ளதால் எதிர்க்கட்சிகளும் தலித் ஒருவரையே வேட்பாளராக இறுதி செய்ய வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com