ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி: பஞ்சாப் அரசு அறிவிப்பு

பஞ்சாபில் ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் 10 லட்சம்
ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி: பஞ்சாப் அரசு அறிவிப்பு

பஞ்சாபில் ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் 10 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் பஞ்சாப் அரசு உயர்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து பஞ்சாபிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் பேரவைத் தேர்தலில் வேளாண் மக்களின் நலன் சார்ந்த பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப் போவதாகத் தெரிவித்தது அவற்றில் முக்கியமான ஒன்று.
அதுமட்டுமன்றி அடமானத்தில் உள்ள வேளாண் நிலங்களை ஏலம் விடும் நடைமுறையை ஒழிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளித்தது. இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய அக்கட்சி, விவசாயக் கடன்கள் தொடர்பாக ஆய்வு செய்ய தனிக் குழுவொன்றை அமைத்தது.
அந்தக் குழு, தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநில சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பேசியதாவது:
பஞ்சாப் விவசாயிகள் பெற்ற ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதைத் தவிர நடுத்தர விவசாயிகள் எத்தனை ரூபாய் கடன் பெற்றிருந்தாலும், அதிலிருந்து ரூ.2 லட்சம் தள்ளுபடி செய்யப்படும்.
கடன் சுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இதுவரை தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. அந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் மாநிலத்தில் உள்ள 10 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் பஞ்சாப் விவசாயிகளுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும் என்றார் அவர்.
அண்மையில், நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பேசிய அமரீந்தர் சிங், 'கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாபில் ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலி தள அரசின் தவறான நிர்வாகத்தால் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்; தற்போது, வேளாண் மக்களின் நலனுக்காக காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அக்கட்சியினர் தடுத்து நிறுத்த முற்படுகின்றனர்' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com