ரூ.709 கோடியை செலுத்த சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்

நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் ரூ.709.82 கோடியை வங்கிக் கணக்கில் செலுத்த உச்ச நீதிமன்றம் மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்கியுள்ளது

நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் ரூ.709.82 கோடியை வங்கிக் கணக்கில் செலுத்த உச்ச நீதிமன்றம் மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
சுப்ரதா ராய் ரூ.1,500 கோடியை இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்ற நிபந்தனையுடன் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கியுள்ளது. அவரது ஜாமீன் ஜூலை 3-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரதா ராய் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் நீதிமன்றதில் ஆஜரானார். அவர் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி செபி-சகாரா நிறுவன வங்கிக் கணக்கில் ரூ.790.18 கோடியை ஏற்கெனவே செலுத்திவிட்டோம். மீதமுள்ள ரூ.709.82 கோடியைச் செலுத்த 10 நாள்கள் அவகாசம் வேண்டும் என்று கபில்சிபல் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 10 நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
முன்னதாக, இந்தப் பணத்தை சுப்ரதா ராய், வங்கியில் செலுத்தாவிட்டால், மகாராஷ்டிர மாநிலம் ஆம்பி வேலியில் உள்ள சஹாரா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.34,000 கோடி சொத்து விற்பனை செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியது.
வழக்கின் பின்னணி: முதலீட்டாளர்களிடம் பெற்ற சுமார் ரூ.24 ஆயிரம் கோடி பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்த வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட சுப்ரதா ராய், தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர், 2016-ஆம் ஆண்டு மே மாதம் பரோலில் வெளியே வந்தார். அதன் பிறகு அவர் ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com