லாலு மகள் மீதான நில மோசடி வழக்கில் சொத்துகள் முடக்கம்

ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி தொடர்புடைய பினாமி நில மோசடி வழக்கில், கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகளை வருமான வரித்

ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி தொடர்புடைய பினாமி நில மோசடி வழக்கில், கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்த காலகட்டத்தில், ஏராளமான நிலங்கள் மற்றும் வீடுகளை போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் பினாமி சொத்துகளாக வாங்கிக் குவித்ததாக மிசா பாரதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில், தில்லியில் ரூ.1000 கோடி மதிப்பிலான நிலத்தை பினாமி பெயரில் வாங்கிய விவகாரமும் ஒன்று.
இந்தக் குற்றச்சாட்டை பாஜக தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில், இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு உதவியதாக ஆடிட்டர் ராஜேஸ் குமார் அகர்வால் என்பவரை அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்தது தொடர்பாக வருமான வரித்துறையினர் தனியே வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமாருக்கும் வருமான வரித்துறை அண்மையில் இரு முறை அழைப்பாணைகளை அனுப்பியது. ஆனால், இந்த அழைப்பாணைகளை அவர்கள் புறக்கணித்துவிட்டனர்.
இந்நிலையில், பினாமி பெயரில் மிசா பாரதி வாங்கியதாக சந்தேகிக்கப்படும் தில்லியில் ஒரு வீட்டையும், மனையையும் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை முடக்கினர். இதுதொடர்பான நோட்டீஸ், சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com