விடைத்தாள் திருத்தும் பணிகள்: சிபிஎஸ்இ மீது உயர் நீதிமன்றம் விமர்சனம்

சிபிஎஸ்இ தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தவறு நேர்ந்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தில்லி உயர் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தவறு நேர்ந்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தில்லி உயர் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
சிபிஎஸ்இ கல்வி வாரியம் தமது மறு மதிப்பீட்டுக் கொள்கையை கைவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் சில மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லியில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட பிளஸ் 2 தேர்வை நாங்கள் எழுதியிருக்கிறோம். இந்தத் தேர்வில் எங்களுக்கு கிடைத்த மதிப்பெண்களானது நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாக உள்ளது.
எனவே, எங்கள் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யுமாறு சிபிஎஸ்இ கல்வி வாரியத்திடம் கோரினோம். ஆனால், தற்போது உள்ள விடைத்தாள் மறு மதிப்பீட்டுக் கொள்கை மாற்றப்படவுள்ளதால் எங்களின் கோரிக்கையை சிபிஎஸ்இ நிராகரித்துவிட்டது. எனவே, சிபிஎஸ்இ-யின் மறு மதிப்பீட்டுக் கொள்கையை ரத்து செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. மேலும், தங்கள் மனுவுடன் சிபிஎஸ்இ குறித்து நாளிதழின் வெளியான செய்தியையும் அவர்கள் இணைத்திருந்தனர்.
அந்தச் செய்தியில், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் சிலர் விடைத்தாள் மறு மதிப்பீடுக்கு அனுப்பியிருந்ததாகவும், அவ்வாறு மறு மதிப்பீடு செய்து வந்த விடைத்தாள்களில் 35-இலிருந்து 40 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஏ.கே. சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
சிபிஎஸ்இ தேர்வு விடைத்தாள்களில் மதிப்பெண்களைக் கூட்டுவதிலேயே இத்தனை பெரிய தவறுகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது, தேர்வு விடைத்தாள்களைத் திருத்துவதிலும் கட்டாயம் தவறு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, தேர்வு விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யும் கொள்கையை ரத்து செய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், பிளஸ் 2 வகுப்பின் அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் முறை குறித்தும் ஓர் அறிக்கையையும் சிபிஎஸ்இ தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com