யோகா இந்தியாவுடன் உலகத்தை இணைக்கும்: பிரதமர் மோடி உரை

யோகாவின் புகழ் இந்தியாவுடன் உலகத்தை இணைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
யோகா இந்தியாவுடன் உலகத்தை இணைக்கும்: பிரதமர் மோடி உரை

லக்னோ: யோகாவின் புகழ் இந்தியாவுடன் உலகத்தை இணைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ஐ.நா. அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 3வது சர்வதேச யோகா தினம் இன்று புதன்கிழமை (ஜூன் 21) யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்று வரும் 3வது சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, யோகா இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்றார்.

இன்று நடைபெற்று வரும் சர்வதேச யோகா தினம் 2017 கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்த மோடி, இந்தியாவுக்கு வெளியே யோகாவின் புகழ் பிரம்மாண்டமாக உள்ளது. யோகா இந்தியாவுடன் உலகத்தை இணைத்துள்ளது.

மேலும், கடந்த 3 ஆண்டுகளில் பல கல்வி நிறுவனங்கள் யோகா மையங்களை திறந்துள்ளதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். இதனால் யோகா ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்திய யோகா ஆசிரியர்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

யோகா இந்தியா உலகிற்கு அளித்த கொடை. நாளுக்கு நாள் வாழ்வின் அங்கமாக யோகா மாறிக்கொண்டிருக்கிறது. உடற்பயிற்சி தவிர, ஆரோக்கியம் முக்கியம், யோகா செய்வது உங்கள் உடல் நிலைக்கு எந்த செலவும் இல்லாமல் காப்பீடு செய்வது போன்றது. யோகா நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் அடைவதற்கு ஒரு நாகரீகம் என்று கூறிய மோடி, உலக மக்கள் யோகாவை கற்றுக்கொள்ள இந்தியர்களை எதிர்பார்க்கின்றனர் என்று மோடி கூறினார்.

பிரதமர் உரையாற்றிய பின்னர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "யோகா வாழ்க்கையின் ஒரு கலை. ஒற்றுமையாக இருப்பதை கற்றுக்கொடுக்கிறது. நம்முடைய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக யோகா உள்ளது. யோகாவால் முதுமை வாராது. அது நம்மை எல்லோரையும் இணைக்கிறது என்று கூறினார்.

இன்று காலை நடைபெற்ற யோக பயிற்சி நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. ஆளுநர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் யோக குருக்கள் உள்ளிட்ட 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

80 நிமிடம் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் மழை பெய்து கொண்டிருந்த போதிலும், பொறுமையாக காத்திருந்து நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக முடித்து தந்தனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மராட்டியத்தில் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மணிப்பூரில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com