குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில், அதிமுகவின் ஒரு பிரிவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம்
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில், அதிமுகவின் ஒரு பிரிவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்டவை ஏற்கெனவே அவருக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. எனவே, ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறுவது உறுதியாகிவிட்டது.

வாக்கு மதிப்பு: குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 708 ஆகும். எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு அந்த மாநில மக்கள்தொகை அடிப்படையில் அமையும். அதாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு அதிகமாகவும், குறைவான மக்கள்தொகை கொண்ட மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு குறைவாகவும் இருக்கும்.
வெற்றிக்கு 50% வாக்குகள் தேவை: எம்.பி., எம்எல்ஏக்கள் அளிக்கும் வாக்குகளின் மொத்த மதிப்பு 10,98,903 ஆகும். இதில், 50 சதவீதத்துக்கு மேல், அதாவது பதிவாகும் வாக்குகளில் மதிப்பில் 5,49,452 பெறும் வேட்பாளர் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார்.
பாஜக கூட்டணியில்...: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 5,37,683 ஆகும். இது சிவசேனை எம்.பி., எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பையும் சேர்த்ததாகும். சிவசேனை உறுப்பினர்களின் மதிப்பை சேர்க்காமல் பாஜக கூட்டணியின் வாக்கு மதிப்பு 5,11,790 ஆகும்.
வெற்றி எளிதாகும்: பிஜு ஜனதா தளம், அதிமுகவின் ஒரு பிரிவு, தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தால் அவரின் வாக்கு மதிப்பு 8,83,578 ஆக உயரும். இது வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகளைவிட அதிகமாகும். எனவே, ராம் நாத் கோவிந்த் மிக எளிதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில்தான் நடத்தப்படுகிறது. அதில் கட்சிக் கொறடா உத்தரவு செல்லாது. எனவே, எம்.பி., எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும்.
கடந்த தேர்தலில்...: கடந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி 7,13,763 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பி.ஏ.சங்மாவுக்கு 3,15,987 வாக்குகளே கிடைத்தன.
ஆளுநர் பதவி ராஜிநாமா: இதற்கிடையே, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராம் நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை காலையில் சந்தித்தார். இதன் பின்னர் பிகார் மாநில ஆளுநர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை அவர் முறைப்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற சில நிமிடங்களில், ராம் நாத் கோவிந்த்தின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன. பிகார் மாநில ஆளுநர் பதவியில் இருந்து ராம் நாத் கோவிந்த் ராஜிநாமா செய்துள்ளதையடுத்து, அப்பதவியை கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கவனிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
"மக்களின் ஆதரவு உள்ளது': இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய ராம் நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் தமக்கு மக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
பிகார் மாநில ஆளுநர் பதவியை மனநிறைவுடன் ராஜிநாமா செய்துள்ளேன். குடியரசுத் தலைவர் வேட்பாளராக என்னை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. என் மீது கட்சித் தலைவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தேர்தல் வெற்றிக்காக அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோருவேன். சமூகத்தின் பல நிலைகளைக் கடந்து அரசியலமைப்பின் முக்கியப் பொறுப்பை வகிக்கும் அளவுக்கு என்னை ஊக்குவித்தது தீவிர உழைப்பும், ஈடுபாடும்தான். எனக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கிறேன். நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவரின் ஆதரவும் எனக்கு உள்ளது என்றார் ராம் நாத் கோவிந்த்.
தலைவர்கள் வாழ்த்து: முன்னதாக, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் ராம் நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து பாஜக தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரசாரத்துக்கு தயார்: அடுத்த மாதம் 17}ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு வரும் 28}ஆம் தேதி கடைசி நாள் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை நாளான ஜூன் 26}ஆம் தேதி ஆகிய நாள்கள் நீங்கலாக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியான மக்களவை செகரட்டரி ஜெனரல் அனூப் மிஸ்ரா அலுவலகம் கூறியுள்ளது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக மீதமுள்ள நாள்களில் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று அங்குள்ளஅரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ராம் நாத் கோவிந்த் ஆதரவு திரட்டத் திட்டமிட்டுள்ளார். அவரது சார்பில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் மாநில வாரியா க சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com