3 லட்சம் பேர் பங்கேற்ற யோகா தின விழா

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். இது உலக சாதனை முயற்சி என்று யோகா குரு ராம்தேவ் கூறினார்.
ஆமதாபாத் நகரில் நடைபெற்ற 3-ஆவது ஆண்டு சர்வதேச யோகா  தின விழாவில் பங்கேற்று யோகாசனம் செய்த (இடமிருந்து) குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர்.
ஆமதாபாத் நகரில் நடைபெற்ற 3-ஆவது ஆண்டு சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்று யோகாசனம் செய்த (இடமிருந்து) குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர்.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். இது உலக சாதனை முயற்சி என்று யோகா குரு ராம்தேவ் கூறினார்.

மூன்றாவது சர்வதேச யோகா தின விழா, உலகம் முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் மிகப்பெரிய அளவில் யோகா தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யோகா குரு ராம்தேவ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மாநில முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல், முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும், உயர் நீதிமன்ற நீதிபதிகளும், அரசு அதிகாரிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அதிகாலையில் லேசான தூறல் விழுந்த போதிலும், யோகா குரு ராம்தேவ் தலைமையில், விழாவில் பங்கேற்ற அனைவரும் தங்களது உடலை வளைத்து பல்வேறு யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டனர். விழா மேடையில் ராம்தேவுடன் அமித் ஷா, விஜய் ரூபானி ஆகியோர் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரப் பயிற்சிக்குப் பிறகுப் பேசிய யோகா குரு ராம்தேவ், ஒரே இடத்தில் 3 லட்சம் பேர் கூடியிருப்பது, உலக சாதனை என்றார். அவர் மேலும் கூறியதாவது:
சுமார் 3 லட்சம் பேர், ஒரே இடத்தில் கூடி யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது புதிய உலக சாதனை முயற்சியாகும். இதற்கு முன்பு, தில்லி ராஜபாதையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில், பிரதமர் மோடியுடன் 35,985 பேர் பங்கேற்றனர். இந்த முந்தைய சாதனையை தற்போது முறியடித்திருக்கிறோம்.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகக் குழுவினரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, மொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அவர்கள் அறிவிப்பார்கள்.
அமித் ஷா பற்றி ராம்தேவ்: அண்மைக் காலமாக, அமித் ஷா யோகாசனம் செய்வதால் அவருடைய உடல் எடை குறைந்து விட்டது. எனினும், அவருடைய அரசியல் வலிமை கூடிவிட்டது. அது, பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள், தங்களது பதற்றத்தில் இருந்து விடுபட யோகாசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராம்தேவ்.
மோடியைப் பாராட்டி அமித் ஷா: அதைத் தொடர்ந்து அமித் ஷா பேசுகையில், "யோகாசனத்தை உலக அளவில் பிரபலமாக்கியவர் பிரதமர் மோடி' என்று புகழாரம் சூட்டினார். அவர் மேலும் பேசியதாவது:
யோகாசனத்தை பிரபலமாக்குவதற்கு 2011-ஆம் ஆண்டு முதலே முயன்று வந்தோம். எனினும், 2014-ஆம் ஆண்டில் பிதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்த பிறகே நமக்கு வெற்றி கிடைத்தது. அதன் பிறகு, உலகம் முழுவதும் யோகாசனம் அதிகவேகமாக பிரபலமடைந்து வருகிறது என்றார் அமித் ஷா.
குஜராத் மாநிலத்தில், ஜிஎம்டிசி மைதானத்தைத் தவிர, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், அரசு சார்பில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.
நீரில் யோகாசனம்: ராஜ்கோட்டில் பல்வேறு இடங்களில் உள்ள நீச்சல் குளங்களில் தண்ணீரில் நின்றபடி 792 பெண்கள் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com