குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக பிரகாஷ் அம்பேத்கர் தேர்வாக வாய்ப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பிரகாஷ் அம்பேத்கர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக பிரகாஷ் அம்பேத்கர் தேர்வாக வாய்ப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பிரகாஷ் அம்பேத்கர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேக்தர், மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். அவரது பெயரை இடதுசாரிக் கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகள் ஏற்றுக்கொண்டால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பிரகாஷ் அம்பேத்கர் அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
இது தொடர்பாக இடதுசாரிக் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரகாஷ் அம்பேத்கரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் இடம் பெறாத பிற கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்.
அவர்கள் ஒத்துக் கொண்டால், பிரகாஷ் அம்பேத்கர், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்தன.
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றன. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர் பங்கேற்கின்றனர். இதில், பிரகாஷ் அம்பேத்கரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
63 வயதாகும் பிரகாஷ் அம்பேத்கர், பாரிப் பகுஜன் மகாசங்கம் என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். மகாராஷ்டிரத்தின் அகோலா தொகுதியில் இருந்து இருமுறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, கோபால கிருஷ்ண காந்தி உள்ளிட்டோரது பெயர்களும் எதிர்க்கட்சிகளின் பரிசீலனையில் இருந்தன.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை பாஜக நிறுத்தியுள்ளது. எனவே, அவரை எதிர்த்து மற்றொரு வலுவான தலித் தலைவரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com