துணை நிலை ஆளுநருடன் ஆம் ஆத்மி தலைவர்கள் சந்திப்பு: கட்சி அலுவலகத்தை காலி செய்யும் விவகாரம்

தீன தயாள் உபாத்யாய் மார்கில் உள்ள பங்களாவில் இருந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக

தீன தயாள் உபாத்யாய் மார்கில் உள்ள பங்களாவில் இருந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக அக்கட்சித் தலைவர்கள் குழு ஒன்று, துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை செவ்வாய்க்கிழமை சந்தித்தது.

அரசு பங்களாவில் உரிய அனுமதியின்றி ஆம் ஆத்மி அலுவலகம் செயல்பட்டு வருவதாகக் கூறிய தில்லி பொதுப் பணித்துறை, அந்த பங்களாவை காலி செய்யுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், ரூ.27 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

இந்நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைவர்கள் சஞ்சய் சிங், ஆசுதோஷ் ஆகியோர் அடங்கிய குழு, ஆளுநர் மாளிகையில் அனில் பய்ஜாலை செவ்வாய்க்கிழமை சந்தித்தது.

அப்போது, "தில்லி சட்டப்பேரவையில் 4 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டுள்ள பாஜகவுக்கு 7 கட்சி அலுவலகங்கள் உள்ளன. எம்எல்ஏக்களே இல்லாத காங்கிரஸ் கட்சி 4 அவலுலகங்களை வைத்துள்ளது. அப்படியிருக்கயில், 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி பேரவையில் 66 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை இவ்வாறு தனிமைப்படுத்துவது சரியல்ல' என்று அந்தக் குழு ஆளுநரிடம் முறையிட்டுள்ளது.

பின்னணி: கேஜரிவால் அரசு கடந்த 2015}ஆம் ஆண்டு, மாநில கட்சிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து ரெளஸ் அவென்யூவில் உள்ள பங்களா ஒன்றை ஆம் ஆத்மி கட்சிக்காக அடுத்த ஆண்டே ஒதுக்கீடு செய்தது. முன்னதாக அந்த பங்களாவானது, ஊழல் புகார் காரணமாக தில்லி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆசிம் அகமது கானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆம் ஆத்மி அரசால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஷுங்லு குழு, ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு இருப்பதாக பரிந்துரைத்தது.

இதையடுத்து கட்சி அலுவலகத்துக்கான ஒதுக்கீட்டை இந்த ஆண்டு ஏப்ரலில் துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜால் ரத்து செய்தார்.

அதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்தை காலி செய்யுமாறு கட்சியின் தேசிய அமைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி பொதுப் பணித்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com