ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப் போவதில்லை: லாலு அறிவிப்பு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப் போவதில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப் போவதில்லை: லாலு அறிவிப்பு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப் போவதில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் எதிர்க்கட்சிகள் சார்பாக களமிறங்கும் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டின் குடியரசுத் தலைவர் அரியணையில் அடுத்து அமரப் போவது யார் என்ற கேள்வி 125 கோடி மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. பாஜக சார்பில் தலித் தலைவரான ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
அவரை காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால், பாஜக வேட்பாளரின் வெற்றிவாய்ப்பு எளிதாகியுள்ளது. இருப்பினும், அவருக்கு கடுமையான போட்டியைத் தர முனைப்பு காட்டி வரும் எதிர்க்கட்சிகள், தங்களது சார்பில் வலிமையான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த ஆயத்தமாகி வருகின்றன. ராம்நாத் கோவிந்த் தலித் என்பதால் அவருக்கு எதிராக அதே சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரைக் களமிறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில் பிகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத், பிகாரில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எடுக்கும் முடிவினை ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரிக்கும். அவர்களுடன் இணைந்தே நாங்கள் செயல்படுவோம். பாஜக வேட்பாளருக்கு நிச்சயமாக ஆதரவளிக்க மாட்டோம்.
வேட்பாளர் தேர்வில் எதிர்க்கட்சிகளிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டது என்றார் அவர்.
கேரள ஜேடியு எதிர்ப்பு: இதனிடையே, ஐக்கிய ஜனதா தளத்தின் கேரளத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வீரேந்திர குமாரும் பாஜக வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்ததற்கு பிகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதீஷ் குமார் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com