காஷ்மீர்: தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக 2,000 வீரர்கள்

காஷ்மீரில் பயங்கரவாதப் பதற்றம் அதிகரித்துள்ள நான்கு தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக சுமார் 2,000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதப் பதற்றம் அதிகரித்துள்ள நான்கு தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக சுமார் 2,000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
காஷ்மீரின் குல்காம், அனந்த்நாக், சோபியான், புல்வாமா ஆகிய தென் மாவட்டங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து, அந்தப் பகுதியில் ராணுவத்தின் படை பலத்தை அதிகரிக்கும் வகையில் சுமார் 2,000 வீரர்களைக் கொண்ட இரண்டு படைப் பிரிவை அங்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, காஷ்மீர் தென் மாவட்டங்களின் பாதுகாப்புப் பொறுப்பை கவனித்து வரும் ராணுவத்தின் "விக்டர்' படைப் பிரிவுத் தளபதி பி.எஸ். ராஜு, அந்தப் பகுதிகளில் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டார்.
கூடுதலாக அனுப்பப்படும் ராணுவ வீரர்கள், குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் பயங்கரவாத அபாயம் நிறைந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரோடு இணைந்து பாதுகாப்புப் பணியை மேற்கொள்வர்.
மேலும், சோபியான், புல்வாமா, பட்காம் ஆகிய மாவட்டங்களிடையே பயங்கரவாதிகள் நடமாடப் பயன்படுத்தும் புல்வாமா மாவட்டத்தின் லிட்டெர் பகுதியில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நான்கு மாவட்டங்களையும் சேர்ந்த ஸயின்போரா, குத்வானி, நாக்பல் ஆகிய பகுதிகளிலும் புதிதாக ராணுவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதுதவிர, ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெறும் சமயங்களில், அந்த இடத்துக்கு வர வேண்டாம் என்பதை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில், கிராமத்தினருடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கும் ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com