குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார்

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார்

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக, தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் போட்டியாக, அதே சமூகத்தைச் சேர்ந்த மீரா குமாரை எதிர்க்கட்சிகள் களமிறக்கியுள்ளன.
இவர், மறைந்த சுதந்திரப் போராட்டத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான பாபு ஜெகஜீவன் ராமின் மகள் ஆவார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம், தில்லியில் நாடாளுமன்ற நூலக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆஸôத், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இடதுசாரித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என 17 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக, மீரா குமார், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மாநிலங்களை எம்.பி. பாலச்சந்திர முங்கேகர் ஆகிய மூவரின் பெயர்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பரிந்துரை செய்தார். இவர்களில், ஷிண்டேவும், பாலச்சந்திர முங்கேகரும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினர் ஆவர்.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் வேட்பாளராக, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களை சீதாராம் யெச்சூரி பரிந்துரை செய்தார்.
எனினும், குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமாரையே களமிறக்குவது என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சோனியா காந்தி, மீரா குமாரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவித்தார்.
நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "யாருடனும் அதிருப்தி இல்லை; மற்ற கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு தரும்' என்று சோனியா காந்தி பதிலளித்தார்.
இதற்கு முன்பு சோனியா காந்தி தலைமையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் சார்பில் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஐக்கிய ஜனதா தளம் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டது.


தூதரக அதிகாரி முதல் மக்களவைத் தலைவர் வரை...

72 வயது நிரம்பிய மீரா குமார், பிகார் மாநிலம், அரா மாவட்டத்தில், ஜெகஜீவன் ராம் - இந்திராணி தேவி தம்பதிக்கு கடந்த 1945-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி மகளாகப் பிறந்தார்.
எம்.ஏ. முதுகலை படிப்பும், எல்எல்பி சட்டமும் பயின்ற இவர், துப்பாக்கிச் சுடுதலிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
1980-இல் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்த மீரா குமார், பின்னர், உச்ச நீதிமன்ற வழக்குரைஞரான மஞ்சுள் குமாரை மணமுடித்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தூதரக அதிகாரியாக..: இந்திய வெளியுறவுப் பணியில்(ஐ.எஃப்.எஸ்.) 1973-ஆம் ஆண்டில் சேர்ந்த மீரா குமார், ஸ்பெயின், பிரிட்டன், மோரீஷஸ் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வலியுறுத்தலின் பேரில், அரசியலில் களம் இறங்குவதற்காக, தாம் ஆற்றி வந்த தூதரகப் பணியை 1985-ஆம் ஆண்டு ராஜிநாமா செய்தார். அதே ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அரசியல் பயணத்தைத் தொடங்கிய மீரா குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராம்விலாஸ் பாஸ்வான், மாயாவதி ஆகியோரைத் தோற்கடித்தார்.
அதைத் தொடர்ந்து, தில்லி கரோல்பாக் மக்களவைத் தொகுதியில் இருந்து 1996-ஆம் ஆண்டிலும் 1998-ஆம் ஆண்டிலும் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரது வெற்றிப் பயணம் நீடிக்கவில்லை, 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
மத்திய அமைச்சராக..: பிறகு 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தனது தந்தையின் மக்களவைத் தொகுதியான பிகாரின் சாசாராம் தொகுதியில் போட்டியிட்ட மீரா குமார், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, நீர்வளத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
மக்களவைத் தலைவராக...: 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தபோது, முதல் பெண் மக்களவைத் தலைவராக, மீரா குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை மக்களவைத் தலைவராக அவர் பதவி வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com