நீதிபதி கர்ணன் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
நீதிபதி கர்ணன் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக, அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், கர்ணனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென்று சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவையில் தங்கியிருந்த கர்ணனை கொல்கத்தா போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றனர். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கர்ணன், கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக புதன்கிழமை கூறினார். சிறையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அவர் கொல்கத்தா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
எனினும், வியாழக்கிழமை காலை முதல் கர்ணன் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். காலை உணவையும் சரியாக சாப்பிடவில்லை. இதையடுத்து, அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்த சிறைத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மீண்டும் இதய செயல்பாடுகள் தொடர்பான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்பிறகு, அவரை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கர்ணனுக்கு 62 வயது ஆவதால், உடல்நிலையில் சிறப்பு கவனம் எடுத்துள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கர்ணன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ஏற்க மறுத்த அவர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக கைது ஆணையும் பிறப்பித்தார். இதனால், அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், இதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் உச்ச நீதிமன்றம் தொடுத்தது. கைதாவதில் இருந்து தப்ப கர்ணன் கடந்த மே 9-ஆம் தேதி தலைமறைவானார். இதனிடையே, அவர் கடந்த 12-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். பின்னர், கோவையில் ரகசியமாக தங்கியிருந்தபோது கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com