பாடநூல்கள் வாங்க பணமில்லாததால் விவசாயி மகன் தற்கொலை

பள்ளிப் பாடநூல்கள் வாங்க பணமில்லாததால் மகாராஷ்டிரத்தில் ஏழை விவசாயி ஒருவரின் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளிப் பாடநூல்கள் வாங்க பணமில்லாததால் மகாராஷ்டிரத்தில் ஏழை விவசாயி ஒருவரின் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாபிலால் முகமது அத்தார்; விவசாயி. மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சியால் இவரது விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தான் வங்கியிலிருந்து பெற்ற பயிர்க்கடனான ரூ.1 லட்சத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அத்தார் இருந்து வருகிறார்.
இவரது மகன் அர்பாஸ் (13). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், புதிய கல்வியாண்டுக்கான பாடநூல்களையும், புதிய சீருடையையும் வாங்கித் தருமாறு அர்பாஸ் தனது தந்தையிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேட்டிருக்கிறார்.
ஆனால், தம்மிடம் பணமில்லாததால் பாடநூல்களையும், சீருடையையும் வாங்குவது கடினம் என அத்தார் கூறியுள்ளார். இதனால், கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் அர்பாஸ் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், தனது தந்தையின் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் அர்பாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடப் புத்தகமும், சீருடையும் வாங்க பணமில்லாததால் விவசாயியின் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com