மரண தண்டனை கைதிகளுக்கான சட்ட உரிமைகள்: உச்ச நீதிமன்றம்

கருணை மனு, சீராய்வு மனு உள்ளிட்டவை நிராகரிக்கப்பட்ட பிறகும், மரண தண்டனைக் கைதிகள் தங்கள் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக முடியுமா என்பது
மரண தண்டனை கைதிகளுக்கான சட்ட உரிமைகள்: உச்ச நீதிமன்றம்

கருணை மனு, சீராய்வு மனு உள்ளிட்டவை நிராகரிக்கப்பட்ட பிறகும், மரண தண்டனைக் கைதிகள் தங்கள் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு விரைவில் விசாரிக்கவுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக அதே பகுதியைச் சேர்ந்த பாபு, சன்னி மற்றும் அவர்களின் நண்பர் ஒருவரை போலீஸார் கடந்த 2012-ஆம் ஆண்டு கைது செய்தனர்.
அவர்களுக்கு இந்தூர் மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர்கள் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்களை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டன. மேலும், அவர்களின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், சீராய்வு மனுவும் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து, அவர்கள் குடியரசுத் தலைவரிடமும் கருணை மனு அளித்தனர். அந்தக் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 25-ஆம் தேதி நிராகரித்தார். இதனால், அவர்கள் எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
புதிய மனு: இந்நிலையில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்படும் கருணை மனு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவை நிராகரிக்கப்படும்பட்சத்தில், மரண தண்டனைக் கைதிகள் தூக்கிலிடப்படுவது உறுதியாகிறது. ஆனால், அதன் பிறகும், வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறோம். ஆனால், அதுபோன்ற மனுக்களை எந்த விசாரணைக்கு உள்படுத்தாமல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த நடைமுறை சரிதானா? என அந்த மனுவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
இந்த மனுவானது நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கௌல் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறுகையில், "பொதுவாக மரண தண்டனைக் கைதிகளின் சட்ட உரிமைகள் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வே விசாரித்து வருகிறது. எனவே, இந்த மனுவையும் மூன்று நீதிபதிகள் அமர்வு கோடைக்கால விடுமுறை நிறைவடைந்த பின்னர் விசாரிக்கும்' எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com