ஏழுமலையானைத் தரிசிக்க ஆதார் அட்டை அவசியம்

திருமலைக்கு வந்து ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார்.
ஏழுமலையானைத் தரிசிக்க ஆதார் அட்டை அவசியம்

திருமலைக்கு வந்து ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:
ஏழுமலையானை தரிசிக்க தினசரி 75 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். திருமலைக்கு வரும் அவர்கள் வாடகை அறை, விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு, ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றுக்கு இதுவரை அவர்களிடம் உள்ள புகைப்படம் அடையாள அட்டை ஏதாவது ஒன்றை அளித்து பெற்று வந்தனர். இந்நிலையில் வங்கி கணக்குகள், பான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் தேவஸ்தானமும், அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க உள்ளது.
அதற்காக திருமலைக்கு வரும் பக்தர்களிடம் தேவஸ்தானம் ஒரு சர்வே மேற்கொண்டது. அதில் தரிசன டிக்கெட் முன்பதிவு, வாடகை அறை முன்பதிவு செய்யும் பக்தர்களில் 98 சதவீதம் பேர் தங்கள் ஆதார் அட்டையை சமர்ப்பிக்கின்றனர்.
அவர்களுடன் வரும் பக்தர்களில் 94 சதவீதம் பேர் ஆதார் அட்டையை காண்பிக்கின்றனர்.
அதில் சிலர் ஆதார் அட்டை இருந்தாலும், வேறு சில அடையாள அட்டையைக் காண்பிப்பது தெரிய வந்தது. அதனால் இனி திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட், வாடகை அறை முன்பதிவு, ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட், ஸ்ரீவாரி சேவை விண்ணப்பம், உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவு விண்ணப்பம் உள்ளிட்ட தேவஸ்தானம் வழங்கி வரும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும். ஆதார் எண்ணை அளித்தால் மட்டுமே அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். இது நாடு முழுவதும் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் பொருந்தும். வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் முன்பதிவு செய்யும்போது ஆதார் அட்டைக்குப் பதிலாக தங்கள் பாஸ்போர்ட் எண்ணை காண்பிக்க வேண்டும்.
மேலும் கோடை விடுமுறையின்போது பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரிந்துரை கடிதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது கோடை விடுமுறை முடிந்து விட்டதால் மீண்டும் வரும் ஜூலை 1}ஆம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் பரிந்துரை கடிதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அளிக்கப்படும். பிரேக் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் இனி கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும்.
திருமலையில் வாடகை அறை பெற்ற பக்தர்கள் 12 மணி நேரத்துக்குள் வாடகை அறையைக் காலி செய்தால் அவர்களுக்கு பாதி பணம் திருப்பி அளிக்கப்படும். இம்மாதம் 16}ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட் பெற 96,837 பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களில் 10,710 பக்தர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு செல்லிடப்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 30ஆம் தேதி 12 மணிக்குள் தங்கள் டிக்கெட்டுகளை பேமெண்ட் கேட் வே மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com