ஆதரவு கோரி உ.பி.யிலிருந்து இன்று முதல் பயணம் மேற்கொள்கிறார் ராம்நாத் கோவிந்த்

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்
ஆதரவு கோரி உ.பி.யிலிருந்து இன்று முதல் பயணம் மேற்கொள்கிறார் ராம்நாத் கோவிந்த்

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் தமக்கு ஆதரவு திரட்டுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் பயணத்தை தொடங்குகிறார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
எனினும், காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள், ராம்நாத் கோவிந்துக்கு போட்டியாக மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருக்கின்றன.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெறுவதற்காக, ஞாயிற்றுக்கிழமை முதல் ராம்நாத் கோவிந்த் நாடு தழுவிய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தமது சுற்றுப் பயணத்தை தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திலிருந்து தொடங்க ராம்நாத் கோவிந்த் முடிவு செய்திருக்கிறார்.
அதற்கு மறுநாள் (திங்கள்கிழமை) உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்று பாஜக தேசிய பொதுச் செயலர் பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.
மீரா குமாரும் சுற்றுப் பயணம்: இதனிடையே, எதிர்க்கட்சி வேட்பாளரான மீரா குமாரும் மக்கள் பிரதிநிதிகளிடம் தமக்கு ஆதரவு அளிக்கக் கோரி லக்னௌவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அவருடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் குலாம் நபி ஆஸாத்தும் உடன் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பணிகள் தொடக்கம்: இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு அந்த மாநில மக்கள் பிரதிநிதிகள் வாக்களிப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக சட்டப் பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்து வாக்களிப்பதற்காக முதல் முறையாக சிறப்பு எழுதுகோலும், மையும் தில்லியில் இருந்து கொண்டுவரப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com