தில்லி கல்லூரியில் சேர்க்கை: அசல் சான்றிதழ் இல்லாததால் தமிழக மாணவர்கள் தவிப்பு

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் சேருவதற்கு தமிழகத்தில் இருந்து வந்த சுமார் 124 மாணவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ் வைத்திருக்காததால்

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் சேருவதற்கு தமிழகத்தில் இருந்து வந்த சுமார் 124 மாணவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ் வைத்திருக்காததால் அவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவு நிறைவேறுமா என்ற கலக்கத்தில் தவித்தனர்.
இது குறித்து கோவையைச் சேர்ந்த மாணவரின் தந்தை ராஜன் கூறுகையில், "பிளஸ்}2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கல்வித் துறைக்குப் பிறகு, தேர்வு முடிவுகளை அறிவித்த சிபிஎஸ்இ, மதிப்பெண் சான்றிதழ்களை அளித்துள்ளது.
அசல் மதிப்பெண் சான்றிதழ் இல்லாததால் வெளி மாநிலங்களுக்குச் சென்று பயில விரும்பும் தமிழக மாணவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்குத் தீர்வு காணும் வகையில் ஆண்டுதோறும் பிளஸ்}2 மதிப்பெண் பட்டியலை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்' என்றார்.
இதே கருத்தை ஈரோட்டைச் சேர்ந்த வேலுச்சாமி, திருப்பூரைச் சேர்ந்த வீரமணி உள்பட மேலும் சில மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களும் வலியுறுத்தினர்.
ஈரோட்டைச் சேர்ந்த மற்றொரு மாணவரின் தந்தை நாகராஜ் கூறுகையில், "காலை 5 மணிக்கே கல்லூரிக்கு வந்துவிட்டோம். முதலில் பல்கலைக்கழக விதிகளின்படி அசல் மதிப்பெண் பட்டியலைக் கேட்டார்கள். பின்னர், தமிழகத்தில் இன்னும் மதிப்பெண் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டவில்லை என்பதை விளக்கினோம்' என்றார்.
இதற்கிடையே, காலை முதல் மாலை மாலை வரையிலும் கல்லூரி வளாகத்திலேயே தவித்த மாணவர்களின் பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் கூடுதல் அவகாசம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதைத் தொடர்ந்து, 'அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 10 வேலை நாள்களுக்குள் சமர்பிப்போம்' என்ற உறுதிமொழியை மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோரிடமும் பெற்றுக் கொண்டு சேர்க்கைக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்தது.
பத்து வேலை நாள்களுக்குள் தமிழக அரசு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழை வழங்காவிட்டால் இந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com