ரூ.34 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி

ரூ.34 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி

மகாராஷ்டிரத்தில் ரூ.34,020 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதாக அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் ரூ.34,020 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதாக அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார்.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் அந்த மாநில விவசாயிகள் கடன் தொல்லையிலிருந்து மீண்டு எழுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர விவசாயிகள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.
அவர்களின் போராட்டத்தால் மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஆளும் பாஜக கூட்டணி அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.34,020 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஃபட்னவீஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வகை செய்யும் மகா திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர் கூறியதாவது:
மொத்தம் ரூ.34,020 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வகை செய்யும் மகா திட்டத்துக்கு மாமன்னர் சிவாஜி மகராஜின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
89 லட்சம் விவசாயிகள் பலனடைவர்: விவசாயிகள் வாங்கிய கடனில் ரூ.1.5 லட்சம் வரை இத்திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் 89 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள். 40 லட்சம் விவசாயிகளின் கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
வங்கிகளில் பெற்ற கடன்தொகையை முறையாக திருப்பிச் செலுத்திவரும் விவசாயிகளுக்கு 25 சதவீத கடன்தொகை திருப்பி அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் மகாராஷ்டிரத்தில் 90 சதவீத விவசாயிகளின் கடன்தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
வங்கிகளில் கடன்பெற்று துயரத்தில் ஆழ்ந்திருக்கும் விவசாயிகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பலனடைவார்கள். விவசாயமும் செய்துகொண்டு மதிப்புக் கூட்டு வரி செலுத்தும் வர்த்தகர்கள், வருமான வரி செலுத்தும் பணக்கார விவசாயிகள், பகுதிநேரமாக விவசாயம் செய்யும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள், ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டிவரும் விவசாயிகள் ஆகியோருக்கு இந்தக் கடன் தள்ளுபடித் திட்டம் பொருந்தாது.
மகாராஷ்டிரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ரூ.7,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை மிக கவனமாக ஆய்வு செய்தோம். அப்போது, சில முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கணக்குத் தணிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, இந்த முறை கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் மட்டும் பலன்பெறும் வகையில் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம்.
விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை விட்டுத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற மாநில விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் மகாராஷ்டிர விவசாயிகளின் கடன்சுமை குறைந்த அளவே உள்ளது.
முதலீடு தேவை: விவசாயக் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு முழுமையான தீர்வாக அமைந்துவிடாது. ஏனென்றால் மீண்டும் அவர்கள் கடன் பெற வேண்டிய தேவை எழும். எனவே, வேளாண் துறையில் நீண்ட கால முதலீடு செய்யப்பட வேண்டும் என்றார் ஃபட்னவீஸ்.
சிவசேனை வரவேற்பு: இதனிடையே, மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனை, விவசாயக் கடன் தள்ளுபடியை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com