ஆளில்லா கடவுப் பாதைகளில் விரைவில் நவீன எச்சரிக்கை அமைப்பு பொருத்தம்

நாடு முழுவதும் உள்ள ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை எச்சரிப்பதற்காக செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய நவீன கருவிகள்

நாடு முழுவதும் உள்ள ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை எச்சரிப்பதற்காக செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய நவீன கருவிகள் பொருத்தப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தக் கருவியானது "இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியா முழுவதும் தற்போது சுமார் 10 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் உள்ளன. கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேல் இருந்த ஆளில்லா ரயில்வே கடவுப்பாதைகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
இருந்தபோதிலும், இந்த ஆளில்லா ரயில்வே கடவுப்பாதைகளால் விபத்துகள் அதிக அளவில் நேரிட்டு வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆளில்லா கடவுப் பாதைகளில் எச்சரிக்கைக் கருவிகளைப் பொருத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்தக் கருவிகளை இஸ்ரோ தயாரித்து வருகிறது.
அதன்படி, ஆளில்லா கடவுப்பாதையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் ரயில் வரும்போது, இந்தக் கருவி பெரும் சத்தத்தை எழுப்பி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும். ரயில் அருகே வர வர, இந்தக் கருவி அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும். பின்னர் ரயில் கடந்து சென்றவுடன், ஒலி எழுப்புவதை இக்கருவி நிறுத்திக் கொள்ளும்.
பாதசாரிகள் மட்டுமன்றி, ஆளில்லா ரயில்வே கடவுப்பாதை குறித்து ரயில் ஓட்டுநர்களை எச்சரிப்பதற்காக ரயில் என்ஜின்களிலும் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
முதல்கட்டமாக, மும்பையிலிருந்து குவாஹாட்டி செல்லும் ராஜதானி ரயில்களிலும், அந்தப் பாதைகளிலும் இந்தக் கருவிகள் சோதனைக்காக விரைவில் பொருத்தப்படும். இதனைத் தொடர்ந்து, மற்ற ரயில்களிலும், ரயில் பாதைகளிலும் இந்தக் கருவிகள் படிப்படியாக பொருத்தப்படும்.
இதுதவிர, எந்தெந்த ரயில்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள செயற்கைக்கோள் உதவியுடனான புதிய கருவியை அனைத்து ரயில்களிலும் பொருத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com