காஷ்மீர்: "ரோப் கார்' அறுந்து விழுந்து 7 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் "ரோப் கார்' 100 அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்மர்க்கில் ரோப் கார் அறுந்து விழுந்த இடத்தில்  மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.
ஜம்மு-காஷ்மீரின் குல்மர்க்கில் ரோப் கார் அறுந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் "ரோப் கார்' 100 அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் குல்மர்க்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ரோப் கார் சேவை உள்ளது. குல்மர்க் நகருக்கு சுற்றுலா வரும் அனைவரும் இந்த ரோப் காரில் பயணித்து இயற்கை அழகை ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ரோப் காரில் பயணிக்க சுற்றுலாப் பணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. அப்போது, திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதில் பெரிய மரம் ஒன்று முறிந்து, ரோப் காருக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பம் மீதும், கம்பிகள் மீதும் விழுந்தது. மரத்தின் பாரம் தாங்காமல் கம்பம் சரிந்து விழுந்தது.
இதனால் அந்தக் கம்பி வழியாக சென்ற ரோப் கார் 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் அந்த ரோப் காரில் இருந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு ரோப் கார் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் குல்மர்க்கில் ஞாயிற்றுக்கிழமை ரோப் கார் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு பழச்சாறு வழங்கிய ராணுவ வீரர்.


இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு விரைந்த போலீஸார், மற்ற ரோப் காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
ரோப் கார் விழுந்த இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் 7 பேரது உடல்களை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் தில்லியில் இருந்த வந்த ஒரே குடும்பத்தினர்; அதில் இருவர் சிறுமிகள். உயிரிழந்த மேலும் 3 பேர் காஷ்மீரைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகளாவர். சுற்றுலா சென்ற இடத்தில் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கேபிள் கார் சேவையை மாநில அரசின் கேபிள் கார் நிறுவனம்தான் மேற்கொண்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு மாநில அரசைக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் அப்துல்லா, சுட்டுரையில் (டுவிட்டர்) கூறியிருப்பதாவது:
காஷ்மீருக்கு குழந்தைகளுடன் சுற்றுலா வந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தைத் தருகிறது. பலத்த காற்று வீசுகிறது என்று தெரிந்தும் ரோப் காரை இயங்கியுள்ளனர். இதனால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ரோப் கார் சேவையை நிறுத்தியிருந்தால், இந்த சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com