மீரா குமாருக்கு சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆதரவு: உ.பி.யில் பாஜகவுக்கு எதிரான மகா கூட்டணிக்கு முன்னோட்டம்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகப் போட்டியிடும் மீரா குமாரை ஆதரிக்க, அரசியலில் பரம விரோதிகளாகக் கருதப்படும் சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டாக முன்வந்திருப்பது

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகப் போட்டியிடும் மீரா குமாரை ஆதரிக்க, அரசியலில் பரம விரோதிகளாகக் கருதப்படும் சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டாக முன்வந்திருப்பது, உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான சக்திகள் மகா கூட்டணி அமைப்பதற்கான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.
நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த சமாஜவாதி, எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை படுதோல்வியைச் சந்தித்தன. இந்தக் கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளிலும் பாஜக கணிசமான வெற்றிகளைப்
பெற்றது.
எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற சிந்தனை சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு வலுத்து வருகிறது. அதற்கு குடியரசுத் தலைவர் தேர்தல் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்தக் கட்சிகளுக்குள்ள வாக்குகளின் மதிப்பைக் கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தைத் தோற்கடிக்கவும் இயலாது; எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாரின் வெற்றி வாய்ப்பை அதிகரித்து விடவும் இயலாது. ஆனால், மீரா குமாரை சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் கூட்டாக ஆதரிப்பது என்பது பாஜகவுக்கு எதிரான சக்திகள் நெருங்கி வருகின்றன என்ற தகவலை வெளிப்படுத்தும்.
இது, வரும் 2019-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகள் கைகோர்ப்பதற்கு வழிவகுக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மக்களவைத் தேர்தலில் 73 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி, 2019 தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களையும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் அசோக் சிங் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாரை ஆதரிக்க சமாஜவாதியும் பகுஜன் சமாஜும் முன்வந்திருப்பது, ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. ஏனெனில், ஒற்றுமையில்தான் தங்கள் பலம் உள்ளது என்பதை அவை உணர்ந்துள்ளன.
மேலும், இது தொடர்பாக மக்களிடம் இருந்தும் நெருக்கடி தரப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர்கள் கூறத் தொடங்கியுள்ளனர் என்றார் அவர்.
உத்தரப் பிரதேசத்தில் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்ததால் ஏற்பட்ட தோல்வியை எதிர்க்கட்சிகள் உணர்ந்து விட்டன. பாஜகவின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் பாட்னாவில் லாலு பிரசாத்தின் ஏற்பாட்டில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெற உள்ள பேரணியில் கூட்டாகக் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இந்த இருவரும் அணிசேர்வதன் மூலம் பிகாரின் எதிர்க்கட்சிகள் மகா கூட்டணி அமைத்து வென்றதைப் போல் உத்தரப் பிரதேசத்திலும் நடைபெற வழிவகுக்கும் என்று அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com