கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: அமித்ஷாவுடன் எடியூரப்பா சந்திப்பு

பெங்களூருக்கு திடீரென வருகை தந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, பொதுச்செயலர் அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: அமித்ஷாவுடன் எடியூரப்பா சந்திப்பு

பெங்களூருக்கு திடீரென வருகை தந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, பொதுச்செயலர் அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஜூலை 17-இல் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமித் ஷா சந்தித்து ஆலோசித்துவருகிறார்.
இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டார். இதற்காக தில்லியில் இருந்து பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 12.45 மணிக்கு அமித் ஷா வருகை தந்தார்.
இதையடுத்து, விமான நிலையம் அருகேயுள்ள ஐந்து நட்சத்திர உணவகத்தில் தங்கியிருந்த அமித் ஷாவை பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, பொதுச் செயலர் அரவிந்த் லிம்பாவளி ஆகியோர் அரை மணி நேரம் சந்தித்து பேசினர்.
அப்போது கர்நாடக அரசியல் நிலவரம், அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இது தவிர, கடந்த ஒரு மாதமாக நடைபெறும் மக்கள் சந்திப்புப் பயணம், வறட்சி பகுதிகளில் நடத்திய ஆய்வு, தலித்துகளின் வீடுகளில் உணவு அருந்தியது போன்றவை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாகத் தெரிவித்த எடியூரப்பா, சட்டப் பேரவைத் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை விளக்கிக் கூறினார்.
இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனை கர்நாடக அரசு தள்ளுபடி செய்துள்ள நிலையில், தேசிய வங்கிகளில் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய எழுந்துள்ள கோரிக்கை குறித்தும் அமித் ஷாவிடம் எடியூரப்பா எடுத்து கூறினார்.
இதன் பின்னர், கர்நாடகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் வருவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இரவு ஓய்வெடுத்த அமித் ஷா, அதிகாலை 8 மணி அளவில் பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி புறப்பட்டு சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com