குடியரசுத் தலைவர் தேர்தல்: காங்கிரஸ், இடதுசாரிகளிடம் ஆதரவு திரட்டும் பாஜக!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்குமாறு காங்கிரஸ், இடதுசாரி எம்எல்ஏக்களிடம் கேரள பாஜக பிரிவு ஆதரவு கோரி வருகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்குமாறு காங்கிரஸ், இடதுசாரி எம்எல்ஏக்களிடம் கேரள பாஜக பிரிவு ஆதரவு கோரி வருகிறது.
புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக, ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்குப் போட்டியாக மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமாரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வேட்பாளராக அறிவித்திருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த், மீரா குமார் ஆகிய இருவரும் மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களுக்காக ஆதரவு கோரி வருகின்றனர்.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏ-க்களிடம் கேரள மாநில பாஜக பிரிவானது ஆதரவு கோரி வருகிறது.
இதுகுறித்து கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன், மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திடமாகச் செயல்படுத்த வேண்டியது தற்போது அவசியமாகியுள்ளது.
எனவே, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை கேரள காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் கட்சிப் பாகுபாடுகளை புறந்தள்ளி ஆதரவளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டப் பேரவையில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏவும், மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com