பிரேக் மற்றும் சர்குலர் ரயில் டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டியால் வந்த ஆபத்து

நீண்ட தூர ஆன்மிக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரேக் மற்றும் சர்குலர் ரயில் டிக்கெட்டுகளை தற்போதைக்கு வழங்க வேண்டாம் என்று தென்னக ரயில்வே அறிவுறுத்தியுள்
பிரேக் மற்றும் சர்குலர் ரயில் டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டியால் வந்த ஆபத்து


சென்னை: நீண்ட தூர ஆன்மிக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான இடை நிறுத்தப் பயணம் (பிரேக்) மற்றும் முழு சுற்றுப் பயணம் (சர்குலர்) ரயில் டிக்கெட்டுகளை தற்போதைக்கு வழங்க வேண்டாம் என்று தென்னக ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், ஏசி ரயில் பெட்டிகளுக்கான வரி 4.5%ல் இருந்து 5 சதவீதமாக உயர்வதால், டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தென்னக ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கும், ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் தென்னக ரயில்வே அனுப்பியுள்ள அறிவிப்பில், ஜூலை மாதம் முதல் ஒருங்கிணைந்த ரயில் டிக்கெட் வழங்கப்பட உள்ளதால், பிரேக் மற்றும் சர்குலர் ரயில் டிக்கெட்டுகள் வழங்குவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஏசி வகுப்பில் பிரேக் மற்றும் சர்குலர் ரயில் டிக்கெட்டுகளை வழங்கும் போது அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை கணக்கிடுவதில் தொழில்நுட்பப் பிரச்னை இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

படுக்கை வசதி கொண்ட சாதாரண ரயில் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டியால் எந்த மாற்றமும் இல்லை என்பதால், ஏசி வகுப்புக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மட்டுமே இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.

தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பினால், ரயில் பயணிகள் குறிப்பாக தங்களது நீண்ட பயணத்துக்கு இடையே ஆங்காங்கே இறங்கி ஓய்வெடுத்துவிட்டு அடுத்தநாள் அதே டிக்கெட்டில் பயணத்தைத் தொடரும், ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிகம் சிரமத்துக்குள்ளாவார்கள்.

தற்போது, பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் 1,500 கி.மீட்டருக்கும் மேற்பட்ட தூரம் பயணிக்கும் போது சர்குலர் டிக்கெட் எடுத்துக் கொள்வார்கள். இந்த ஒரே டிக்கெட் 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். இவர்கள் இந்த ஒரே டிக்கெட்டில் அதிகபட்சமாக 8 ரயில் நிலையங்களில் இறங்கிக் கொள்ளலாம். 

பிரேக் பயண டிக்கெட்டுக்கு விண்ணப்பிக்கும் பயணிகள், தங்கள் பயண விவரம் குறித்த விண்ணப்பத்தை ரயில் நிலைய அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனை பரிசீலித்து அதற்கான கட்டணத்தை ரயில் நிலைய அதிகாரி முடிவு செய்வார். பிறகு, அந்த விண்ணப்பத்தைக் கொடுத்து பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் பிரேக் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நீண்ட தூரப் பயணத்தின் போது சர்குலர் ரயில் டிக்கெட் எடுத்து ஆங்காங்கே இறங்கிக் கொள்ளும் ஒரு பயணி, 8 ரயில் நிலையங்களிலும், ஒவ்வொரு ரயில் நிலையத்தில் இருந்தும் வெவ்வேறு வகுப்புகளில் அதாவது படுக்கை வசதி, ஏசி, முதல் வகுப்பு என பயணிக்க விரும்பினால் அப்போது ரயில் டிக்கெட்டுக்களுக்கான ஒட்டுமொத்த கட்டணத்தை நிர்ணயிப்பதில் ஜிஎஸ்டியால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன என்று ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

இதற்கு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுலாவையும், பிரீமியம் ரயில்களையும் ஊக்கப்படுத்தும் ரயில்வே துறை, மற்றொரு பக்கம் சர்குலர் ரயில் பயண டிக்கெட்டை ரத்து செய்வது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். ஒரு வேளை தொழில்நுட்பப் பிரச்னை ஏற்பட்டால், சர்குலர் மற்றும் பிரேக் ரயில் டிக்கெட்டுகளை மட்டும் டிக்கெட் வழங்கும் அதிகாரிகளே நேரடியாக வழங்கலாம் என்றும் கூறுகின்றனர்.

படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டியில் பயணிப்பதற்கான வரி விதிப்பில் மாற்றம் இல்லை. அதே சமயம், ஏசி பெட்டிகளுக்கான வரி விதிப்பில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு டிக்கெட்டுக்கு இரண்டு விதமான வரி விதிப்பை கையாள்வதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரேக் பயணம்
500 கி.மீ.க்கும் அதிகமான தூரம் பயணிக்கும் ஒருவர், ஒரே டிக்கெட்டில் நீண்ட பயணத்துக்கு இடையே 2 நாட்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படும். அதுவும், 500 கிமீ பயணத்துக்குப் பிறகுதான் இறங்க முடியும்.
சர்குலர் பயணம்

ஒரே ரயில் நிலையத்தில் தொடங்கி, பல ஊர்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் அதே ரயில் நிலையத்தில் பயணத்தை முடிப்பவர்களுக்கான சிறப்பு டிக்கெட் சர்குலர் பயண டிக்கெட். அனைத்து வகுப்பு ரயில் பெட்டிகளுக்கும் சேர்த்து கட்டணம் கணக்கிடப்படும். இதில் அதிகபட்சமாக 8 ரயில் நிலையங்களில் இறங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் 1000 கி.மீ. தூரம் பயணிக்கும் ஆண் மூத்த குடிமகனாக இருந்தால் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 40%சலுகையும், பெண் மூத்த மகளாக இருந்தாக 50% கட்டணச் சலுகையும் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com