ஆதார்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சமூக நலத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்து விட்டது.
ஆதார்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சமூக நலத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்து விட்டது.
பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த பிப்ரவரி 8}ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மூன்று பேரின் சார்பில் மூன்று மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றில் அரசின் இந்த நடவடிக்கையால், ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சமூக நலத் திட்டங்களின் பயன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே, அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான வாதம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மூன்று மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் ஆஜராகி வாதிட்டார். ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்துக்காக யாரும் மதிய உணவு உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் பயன்களை இழக்கக்
கூடாது. ஒட்டுமொத்த ஆதார் திட்டமும் சுயவிருப்பத்தின் பேரிலேயே அமைந்துள்ளதால் ஆதார் அட்டையைப் பெறுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது வாதத்துக்குப் பதிலளித்து மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அவர் கூறியதாவது:
ஆதார் அட்டை வைத்திருந்தாலும் சரி, வைத்திருக்கா விட்டாலும் சரி, அவர்களுக்கு பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பயன்கள் வழங்கப்படும். யாரிடமாவது ஆதார் அட்டை இல்லாவிட்டால் அவர்கள் வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, பான் அட்டை போன்ற மற்ற அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, திட்டங்களின் பயன்களைப் பெறலாம் என்று அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலியான நபர்கள் பயன்பெற்று விடக் கூடாது என்பதற்காகவே அடையாள அட்டைகள் தேவைப்படுகின்றன. இதனால் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை. மேலும், சமூக நலத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை ஜூன் 30}க்குள் பெற்று விட வேண்டும் என்ற காலக்கெடுவையும் செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது என்று துஷார் மேத்தா தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் கூறியதாவது:
ஆதார் கட்டாயம் என்பதால் சமூக நலத் திட்டங்களின் பயன்கள் சிலருக்கு கிடைக்காமல் போகலாம் என்பது மனுதாரர்களின் அச்சமாகும். ஆனால், வெறுமனே அச்சத்தின் அடிப்படையில் இடைக்கால உத்தரவு எதையும் நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது. அரசின் உத்தரவால் சிலர் பாதிக்கப்படலாம் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு பாதிக்கப்பட்டதாக யாரும் இதுவரை நீதிமன்றத்தை நாடவில்லை. அனைத்துக்கும் மேலாக, ஆதார் கட்டாயம் என்பதால் பயனாளிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அரசே கூறியுள்ளது.
மேலும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவும், பான் அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இம்மாதம் 9}ஆம் தேதி தீர்ப்பளித்ததையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அந்தத் தீர்ப்பு அமலில் உள்ளது.
அதன் 90}ஆவது பத்தியில் ஆதார் குறித்து நீதிபதிகள் தெளிவாக கருத்து கூறியுள்ளனர். எனவே, இதற்கு மேல் நாங்கள் கருத்து கூறவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, மேற்கண்ட மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 7}ஆம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com