குடியரசுத் தலைவர் தேர்தல்: தலித்துகளுக்கு இடையிலான போட்டியாக பார்க்கக் கூடாது: மீரா குமார்

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை தலித்துகளுக்கு இடையிலான போட்டியாக பார்க்கக் கூடாது எ'ன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் தெரிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார். உடன் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா.
தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார். உடன் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை தலித்துகளுக்கு இடையிலான போட்டியாக பார்க்கக் கூடாது எ'ன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பிகார் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தில்லியில் மீரா குமார் முதல்முறையாக செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
நாட்டிலேயே மிகவும் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலில், ஜாதியை அடிப்படையாகக் கொண்டு போட்டியிட நான் விரும்பவில்லை. நாட்டு மக்களும் இதை விரும்ப மாட்டார்கள். இந்தத் தேர்தலில், சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் நாங்கள் போட்டியிடுகிறோம்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு இதற்கு முன்பு தேர்தல்கள் நடைபெற்றபோது, ஜாதி குறித்து விவாதம் நடத்தப்படவில்லை. ஆனால், தலித் சமூகத்தினர் போட்டியிடும்போது மட்டும் ஜாதி குறித்து பேசப்படுகிறது; வேட்பாளர்களின் நல்லொழுக்கங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. ஜாதிக்கு முடிவுகட்டிவிட்டு, அதை குழித் தோண்டி புதைக்க வேண்டும்; சமூகத்தினர் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் ஆகியவையே எனது விருப்பமாகும்.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே நான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறுப்படுவதை மறுக்கிறேன். நான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கும், ஜாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று மீரா குமார் கூறினார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முந்தைய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக தாம் இருந்தபோது நடத்தப்பட்ட விதம் குறித்து விடியோ வெளியிட்டுள்ளார். அதுகுறித்து மீரா குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
மக்களவைத் தலைவராக நான் இருந்தபோது, யாரையும் பாகுபாட்டுடன் நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது கிடையாது. தேர்தலில் என்னை ஆதரிக்கும்படி பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கோரிக்கை விடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று மீரா குமார் தெரிவித்தார்.
இன்று வேட்பு மனு தாக்கல்: இதனிடையே, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனுவை, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் முன்னிலையில் மீரா குமார் புதன்கிழமை (ஜூன் 28) தாக்கல் செய்யவுள்ளார்.
இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம், சபர்மதி ஆசிரமத்தில் இருந்து வரும் 30}ஆம் தேதி முதல் அவர் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com