ஜிஎஸ்டி அமலாக்கத்தை அரசியலாக்கக் கூடாது: காங்கிரஸூக்கு ஜேட்லி அறிவுறுத்தல்

சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வதை காங்கிரஸ் கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி அமலாக்கத்தை அரசியலாக்கக் கூடாது: காங்கிரஸூக்கு ஜேட்லி அறிவுறுத்தல்

சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வதை காங்கிரஸ் கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வரி விதிப்பு முறை என மத்திய அரசால் பிரகடனப்படுத்தப்படும் ஜிஎஸ்டி சட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை வரவேற்கும் விதமாக வரும் 30-ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, அனைத்து மாநில முதல்வர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கும் இந்த சிறப்பு நிகழ்ச்சியானது, நள்ளிரவையும் கடந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவெகௌடா உள்பட பல தலைவர்களும் பங்கேற்றுப் பேசுவார்கள் எனத் தெரிகிறது. இதனிடையே, அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சி உறுதியான அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. இது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அருண் ஜேட்லி, இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை தொடர்பான மசோதாவைப் பொருத்தவரை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரி விதிப்பு விகிதம், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கருத்தொற்றுமை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், இதுதொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் கட்சி எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது. ஜிஎஸ்டி என்பது காங்கிரஸா அல்லது பாஜகவா என்பதை தீர்மானிக்கும் விஷயமல்ல. அது பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பயன்தரக் கூடிய வரிவிதிப்பு கொள்கை. எனவே, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைகளால் முதலில் சில அசெளகரியங்கள் ஏற்படலாம். ஆனால், எதிர்காலத்தில் ஜிஎஸ்டியின் மூலம் வரிஏய்ப்பு ஒழிந்து விலைவாசி குறையும் என்றார் ஜேட்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com