ஜிஎஸ்டி சட்டம் அமல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை புறக்கணிக்க முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவு

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (ஜிஎஸ்டி) ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தில் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு கூட்டப்பட்டுள்ள

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (ஜிஎஸ்டி) ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தில் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு கூட்டப்பட்டுள்ள சிறப்புக் கூட்டத்தை புறக்கணிக்க முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முக்கிய வரிச் சீர்திருத்தமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு கருதப்படுகிறது. இந்த புதிய வரி விதிப்பு முறை நாடு முழுவதும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வரும் 30-ஆம் தேதி இரவு கூட்டப்பட்டுள்ளது. இதையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் சிறப்புக் கூட்டத்தில் இரு அவைகளின் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தவுள்ளார். கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் 30-ஆம் தேதி இரவு நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டத்தை புறக்கணிப்பது என்று முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இடதுசாரிக் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்பை செயல்படுத்துவதற்கு அரசு இயந்திரம் இன்னும் தயாராக இல்லை. ஆனால், மத்திய அரசோ இந்தச் சட்டத்தை செயல்படுத்த அவசரம் காட்டுகிறது. இந்நிலையில், இந்த வரி விதிப்பு அமலுக்கு வரவிருப்பதை கொண்டாடும் வகையில் 30-ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது. எனவே, அக்கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.
ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வரி விதிப்பால், பொது மக்கள் துன்பப்படும்போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று இடதுசாரிக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் பேசியபோது, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை தங்களது கட்சி புறக்கணிக்காது என்றும், அதே நேரத்தில் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கட்சி எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவையும் பிறப்பிக்காது என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com