புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியது கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் !

கடந்த 23-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் பூமி பகுதிகளை புகைப்படங்கள் எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ

கடந்த 23-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் பூமி பகுதிகளை புகைப்படங்கள் எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திரம் மாநிலம் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் மூலம், கார்டோசாட் 2 இ செயற்கைக்கோளும், 30 நானோ செயற்கைக்கோள்களும் ஜூன் 23-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டன.
இந்தியாவின் கார்டோசாட்-2 இ செயற்கைகோள் 712 கிலோ எடைகொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.
இதில் நிலப் பகுதியை துல்லியமாகப் படம் பிடிக்கும் நவீன கேமிராக்கள், தொலையுணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது அதில் உள்ள கேமிராக்கள் அனைத்தும் துல்லியமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. ஜூன் 26- ஆம் தேதி முதல் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.
இந்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதிதான் 103 செயற்கைக்கோள்களுடன் கார்டோசாட் 2 டி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உலகச் சாதனை படைத்தது இஸ்ரோ.
கார்டோசாட்-2 டி செயற்கைகோள் 714 கிலோ எடைகொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இந்தச் செயற்கைக்கோளும் இப்போது தொடர்ந்து படம் எடுத்து அனுப்பி வருகிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
ராணுவப் பயன்பாடு: நாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது அனுப்பப்பட்டுள்ள கார்டோசாட் 2 இ செயற்கைகோள் இதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் செயற்கைக்கோள்களைப் பிரதானமாக்கி இந்திய ராணுவம், அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கார்டோசாட் 1, 2 , ரியோ சாட் 1, 2 ஆகியவை ராணுவக் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிலப்பகுதியிலும் கடல் பகுதியிலும் எதிரி நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் அச்செயல்பாடுகளின் வரைபட எல்லைகளைக் குறிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இந்த வரிசையில் கார்டோசாட் 2 இ, அதிநவீன ரிமோட் சென்சிங் முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. ஜியோ சாட் 7 செயற்கைக்கோளை இந்திய கடற்படை பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com