பதினைந்து வருடங்களுக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க! 

பதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
பதினைந்து வருடங்களுக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க! 

லக்னோ: பதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தற்போதைய சட்டமன்ற  தேர்தலைச் சந்தித்தது..மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிட்டது. இதன் காரணமாக இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.

மாநில சட்டசபையின் மொத்தமுள்ள 403 தொகுதியில் போட்டியிட்ட பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் எனவும், தொங்கு சட்டமன்றம் அமையும் என்றும் இரு வகையான தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம்  வெளியாயின.

ஆனால்  இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.காலை 103.0 மணி நிலவரப்படி தெளிவாக முன்னணி நிலவரம் தெரிந்துள்ள 379 தொகுதிகளில் 274 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி 75 இடங்களில் முன்னணியில் உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியானது 30 இடங்களில்மட்டுமே முன்னணி பெற்றுள்ளது. இதன் காரணமாக பதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பெரும்பாலான தொகுதிகளில் அந்தக் கட்சி முன்னிலை வகிப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காலையிலேயே அவர்கள் பாஜக அலுவலகங்களில் கூடி இனிப்புகள் வழங்கத் தொடங்கினர்.

அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன. இது மிகப்பெரிய பின்னடைவு என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com