பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் கைது!

பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்காரணமாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த உத்தரப் பிரதேச முன்னாள் ...
பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் கைது!

லக்னோ: பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்காரணமாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி இன்று காலை லக்னோவில் கைது செய்யப்பட்டார். 

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர் காயத்ரி பிரஜாபதி. இவரும், இவரது இரு உதவியாளர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது மகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அமைச்சரின் செல்வாக்கு காரணமாக உத்தரப் பிரதேசத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறை முன்வரவில்லை. எனவே, பிரஜாபதி, அவரது உதவியாளர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரஜாபதி உள்ளிட்டோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும், அவர்கள்  மூவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரப் பிரதேச காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரஜாபதி மற்றும் அவரது இரு உதவியாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன் பிரஜாபதி தலைமறைவாகிவிட்டார். உடனடியாக அவரது இரு உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர். பிரஜாபதி வெளிநாடு எதற்கும் தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக அவரது பாஸ்போர்ட்  முடக்கப்பட்டது.

இந்நிலையில் தீவிரமாக தேடப்பட்டு வந்த பிரஜாபதி இன்று  காலை அம்மாநில தலைநகர் லக்னோவில் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com