இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு: தப்பி பிழைக்குமா பாரிக்கர் அரசு? 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோவா மாநில சட்டசபையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு கரையேறுமா ...
இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு: தப்பி பிழைக்குமா பாரிக்கர் அரசு? 

பனாஜி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோவா மாநில சட்டசபையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு கரையேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

நடைபெற்று முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உண்டானது. மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் 13 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, சிறிய  கட்சிகள் மற்றும் சில சுயேட்சைகளின் ஆதரவைப் பெற்று, பெரும்பாண்மையான 21 இடங்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்து, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கடந்த ஞாயிறன்று  ஆளுநர் மிருதுளா சின்ஹா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைத்தார்.மறுநாள் திங்களன்று மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜ ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டது.

இதனிடையே அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாக பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் சந்திரகாந் கவ்லேகர் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கோவா முதல்வர் பாரிக்கர் இன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பாண்மை  பலத்தை நிரூபிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. 

இதனிடையே தனித்த  பெரிய கட்சியாக வென்ற பொழுதிலும் ஆட்சியமைப்பதில் சுணக்கம் காட்டியதாக சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பின்னர் மத்தியிலேயே அதிருப்தியை சம்பாதித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் கட்சியானது, தற்போது தாங்கள் வெற்றி பெற வேண்டிய நான்கு இடங்களைப் பெற சிறிய கட்சிகள் சிலவற்றிடம் வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதரவு தருமாறு கோரி, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இன்று காலை கூட உள்ள கோவா சட்டமன்ற கூட்டத்தில் முதலில் தேர்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார்கள். பின்னர் மாலை ஐந்து மணி அளவில் நமபிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காங்கிரஸ் கட்சியின் தீவிர கடைசி கட்ட முயற்சியின் காரணமாக மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு கரையேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com