இந்தியாவின் அக்னி-5க்குப் போட்டி? பாகிஸ்தானுடன் இணைந்து நவீன ரக ஏவுகணைகளைத் தயாரிக்க சீனா திட்டம்

அணு ஆயுதங்களை சுமந்து சென்று 5,000 கி.மீ. தொலைவு வரை சென்று இலக்கைத் தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளதற்குப் போட்டியாக, தனது நெருங்கிய நட்பு நாடான

அணு ஆயுதங்களை சுமந்து சென்று 5,000 கி.மீ. தொலைவு வரை சென்று இலக்கைத் தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளதற்குப் போட்டியாக, தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுடன் இணைந்து நவீன ரக ஏவுகணைகளைத் தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இந்தியா கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, 5,000 கி.மீ. தூரத்தையும் தாண்டிச் சென்று தாக்கக் கூடிய அதிநவீன அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதித்தது. சீனாவை மனதில் கொண்டே இந்த ஏவுகணைச் சோதனையை இந்தியா நடத்தியதாக பரவலாகக் கருதப்படுகிறது. ஏனெனில், சீனாவின் எந்தவொரு பகுதியையும் அக்னி-5 ஏவுகணையால் சென்றடைய முடியும்.
இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானின் புதிய ராணுவத் தலைமைத் தளபதியான கமர் ஜாவேத் பாஜ்வா முதன்முறையாக சீனா சென்றுள்ளார். அவர் சீன ராணுவத் தலைமைத் தளபதி ஃபாங் ஃபெங்குயுடன் வியாழக்கிழமை விரிவான பேச்சுவார்த்தையை நடத்தினார். மேலும், சீன துணைப் பிரதமர் சாங் காவ்லி, மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ஃபான் சாங்லாங் உள்ளிட்டோரையும் சந்தித்து பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதித்தார்.
இது தொடர்பாக சீன அரசின் அதிகாரபூர்வ நாளிதழான ’குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், பாகிஸ்தானுடன் ராணுவ ஒத்துழைப்பை தீவிரப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாகவும், இரு நாடுகளும் இணைந்து அதிநவீன ஏவுகணைகள், தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங்கிடம் பெய்ஜிங்கில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்ட அவர் ’தெற்காசியாவில் ராணுவச் சமநிலையைப் பராமரிக்க வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு. சீன ராணுவத் தலைமைத் தளபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஏவுகணைகளைக் கூட்டாகத் தயாரிப்பது குறித்து எதுவும் இடம்பெறவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com