63 ஏரிகளைப் பாதுகாக்க ரூ.1,096 கோடியில் திட்டம்: திருச்சி சிவா கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

பதினான்கு மாநிலங்களில் 63 ஏரிகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்த ரூ.1,096 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை துறை இணையமைச்சர் (தனி) அனில் மாதவ் தவே தெரிவித்தார்.

பதினான்கு மாநிலங்களில் 63 ஏரிகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்த ரூ.1,096 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை துறை இணையமைச்சர் (தனி) அனில் மாதவ் தவே தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சி சிவா எழுப்பியிருந்த கேள்விக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை இணையமைச்சர் அனில் மாதவ் தவே எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்த பதில் விவரம்:
மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நீர்ச் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டத்தின் கீழ் ரூ.1,096.09 கோடியில் 14 மாநிலங்களில் 63 ஏரிகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.687.56 கோடி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் எழுப்பியிருந்த டிஜிட்டல் ரேடியோ தொழில்நுட்பம் தொடர்பான கேள்விக்கு மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் கர்னல் (ஓய்வு) ராஜ்யவர்தன் ரத்தோர் மாநிலங்களவையில் அண்மையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், "பிரசார் பாரதி அளித்த தகவலின்படி அகில இந்திய வானொலி நிலையம் அதன் ஒருங்கிணைப்பில் சர்வதேச தரத்திலான டிஜிட்டல் ரேடியோ தொழில்நுட்பத்தை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பமானது வானொலி சேவையில் ஒலியின் தரத்தை அதிகரிக்கச் செய்கிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் ஏ.விஜயகுமார், சென்னை கடலில் நிகழ்ந்த எண்ணெய் கசிவு தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் (தனி) அனில் மாதவ் தவே திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், "சென்னை எண்ணெய் கசிவு சம்பவம் மூலம், கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பான விஷயங்களை மத்திய அரசு உணர்ந்துள்ளது.
இது தொடர்பான தாக்கம் குறித்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நீடித்த கடலோர மேலாண்மைக்கான மையம் நடத்திய களவு ஆய்வின்படி, எண்ணெய் கசிவு காரணமாக கடலில் மொத்த பெட்ரோலியம் கார்பன் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் கூடுதல் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அளிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மக்களவையில் திங்கள்கிழமை மத்திய மனித வள மேம்பாட்டு இணையமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்த பதிலில், "உயர் கல்வியில் தரமான சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் நோக்கில் தன்னாட்சிக் கல்லூரிகள் திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ளது என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com