இலங்கை அறிக்கை அளிக்க கூடுதல் அவகாசம் கோரும் ஐ.நா. தீர்மானத்துக்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு

இலங்கை உள்நாட்டுப் போரின் போது அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கையை அந்நாட்டு அரசு அளிக்க கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அவகாசம்

இலங்கை உள்நாட்டுப் போரின் போது அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கையை அந்நாட்டு அரசு அளிக்க கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
மைத்ரேயன் கோரிக்கை: இது தொடர்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை முக்கியப் பிரச்னைகள் அவையின் கவனத்துக்குக் கொண்டு வரும் நேரத்தில் அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் பேசியதாவது: இலங்கை உள்நாட்டுப் போர் நடைபெற்ற 2009-இல் தமிழர்களைக் குறிவைத்து அந்நாட்டு ராணுவத்தினர் திட்டமிட்டு இனப் படுகொலையில் ஈடுபட்டனர்.
அச்சம்பவங்கள் தொடர்பாக நம்பத் தகுந்த விசாரணை இதுவரை நடைபெறவில்லை. ஒரு குற்றவாளிக்குக்கூட இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இலங்கை போரின் போது அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் மீது வரும் 22-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கை இனப் படுகொலை தொடர்பாக அந்நாட்டு அரசு அறிக்கை அளிக்க 2019-ஆம் ஆண்டு வரை கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அரசு அனுமதி பெற்ற பிறகே அந்நாட்டில் இனப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் இலங்கைக்குள் வர முடியும் என்று புதிதாக ஒரு பிரிவும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அழுத்தம்: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், "இலங்கை இனப் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா முன்னெடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி, தற்போது நாட்டின் சக்தி வாய்ந்த தலைவராக மட்டுமின்றி உலகின் சக்தி மிக்க தலைவராகவும் திகழ்கிறார்.
அந்த வகையில் தமிழர்களுக்கு மோடியால் நீதி வழங்க முடியாவிட்டால் இந்த பூமியில் வேறு எவராலும் அவர்களுக்கு நீதி வழங்க முடியாது.
எனவே, ஜெவா கூட்டத்தில் வரும் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் போது இலங்கை அறிக்கை அளிக்க கூடுதல் அவகாசம் கோரும் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்றார் மைத்ரேயன்.
எம்.பி.க்கள் வலியுறுத்தல்: இதைத் தொடர்ந்து, அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரும் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com