மணிப்பூர் சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி

மணிப்பூர் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பீரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.
மணிப்பூர் சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி

மணிப்பூர் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பீரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.
கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும் பீரேன் சிங்குக்கு ஆதரவாக வாக்களித்தது எதிர்பாராத திருப்பமாக அமைந்தது.
பாஜக ஆட்சி: மொத்தம் 60 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூருக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், அதற்கு அடுத்தபடியாக பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி ஓரிடத்தைக் கைப்பற்றியது.
தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ ஒருவர், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சையின் ஒத்துழைப்புடன் ஆட்சியமைக்கத் திட்டமிட்ட பாஜக, 32 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் பீரேன் சிங்கை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார். இம்பாலில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மாநில முதல்வராக பீரேன் சிங்கும், 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு: இந்நிலையில், பீரேன் சிங் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மாநில சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க குரல் வாக்கெடுப்பு முறை பின்பற்றப்பட்டது. அப்போது திடீர் திருப்பமாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ரபீந்த்ரோ சிங், பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதையடுத்து 33 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பீரேன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
திரிணமூல் சர்ச்சை: இந்நிலையில், கட்சித் தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக ரபீந்த்ரோ சிங் இத்தகைய முடிவை எடுத்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தக் கூற்றை மறுத்துள்ள அவர், கட்சித் தலைமையின் உத்தரவுப்படியே தாம் செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
திரிணமூல் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே பீரேன் சிங் அரசுக்கு ஆதரவாக சட்டப் பேரவையில் வாக்களித்தேன். ஒருவேளை, கட்சிக்கு எதிராகச் செயல்பட்டிருந்தால் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வாய்ப்புள்ளது. இதுவரை அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனும்போதே இந்த விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகியுள்ளது என்றார் அவர்.
ரபீந்த்ரோ சிங்கின் விளக்கம் ஒருபுறமிருக்க, அவர் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் துணைத் தலைவர் முகுல் ராய், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முன்வந்திருந்தால், அதற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம். எங்களது அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் ரபீந்த்ரோ சிங் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார். ஆனால், அங்கு பெரும்பான்மை பலத்தைப் பெற காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. அதன் பிறகு பாஜக எம்எல்ஏக்களுடன் ரபீந்த்ரோ சிங் நெருக்கம் காட்டினார். கட்சித் தலைமையுடன் கலந்தாலோசிக்காமல் ஆளுநர் மாளிகைக்கு பாஜக எம்எல்ஏக்களுடன் அவர் சென்றார். ரபீந்த்ரோ சிங் மீது எப்போது வேண்டுமானாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றார் அவர்.
பேரவைத் தலைவர் தேர்வு: முன்னதாக, மணிப்பூர் சட்டப் பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த யம்னம் கேம்சந்த் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற பேரவைத் தலைவர் தேர்வில், காங்கிரஸ் எம்எல்ஏ கோவிந்த்தாஸ் கோந்தெளஜம்மைக் காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று யம்னம் கேம்சந்த் சிங் வெற்றி பெற்றார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்: மணிப்பூர் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) தொடங்குகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் முதல் நாள் நிகழ்வில் மாநில ஆளுநர் உரையாற்றவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com