வர்தா புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தல்

"வர்தா' புயல் பாதிப்பு நிவாரணத்துக்காக தமிழக அரசு கோரிய நிலுவை நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தியது.
வர்தா புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தல்

"வர்தா' புயல் பாதிப்பு நிவாரணத்துக்காக தமிழக அரசு கோரிய நிலுவை நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தியது.
மக்களவையில் திங்கள்கிழமை பொது பட்ஜெட் துணைநிலை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் வி.சத்யபாமா முன்வைத்த கோரிக்கை வருமாறு:
2017-18 கல்வி ஆண்டில் இருந்து தமிழகத்தில் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 345 எம்பிபிஎஸ் இடங்களுக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள, தமிழக அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.280.30 கோடி நிலுவை நிதியை விரைந்து வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழகத்தில் வர்தா புயலால் சென்னை நகரிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதற்கான மறுகட்டமைப்பு நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.22,575 கோடி கோரியிருந்தது. இதுவரை அத்தொகை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக மத்திய அர வழங்க வேண்டும் என்றார் அவர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.அசோக்குமார் பேசுகையில், "இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் உதவிடும் வகையில் துணை மானிய கோரிக்கையாக ரூ.3 ஆயிரம் கோடி கோரப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை ஒட்டி நிவாரணம், புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான செலவுக்காக மத்திய அரசின் நிதிகள் மற்றும் தேசியப் பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றில் இருந்து உதவிகள் வழங்கக் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.
மாநிலங்களவையில்: மாநிலங்களவையில் 2017-18-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பங்கேற்றுப் பேசுகையில், "பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் குழுவும் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்டுச் சென்றது. எனவே, வறட்சி சூழ்நிலையைக் குறைக்க தமிழகத்திற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,500 கோடியை மத்திய நிதியமைச்சர் வழங்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com