தில்லியில் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர் விஷால் ஆதரவு

தில்லியில் தொடர்ந்து 11 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தில்லியில் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர் விஷால் ஆதரவு


புது தில்லி: தில்லியில் தொடர்ந்து 11 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கணணு தலைமையில் கடந்த 14-ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை, நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், கார்த்தி, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து  போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. எனவே, மத்திய, மாநில அரசுகள் அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

முன்னதாக விவசாயிகளின் பிரச்னையை மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி ஆகியோர் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மக்களவை அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 10 விவசாயிகளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அருண் ஜேட்லியிடம் விவசாயிகளின் கோரிக்கைகளை அய்யாக்கண்ணு முழுமையாக விளக்கினார். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக பாரத ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கலந்து பேச வேண்டும் என்பதால் இரு நாள்கள் அவகாசம் தேவை என்று ஜேட்லி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com