அனைவருக்குமான வளர்ச்சியே இலக்கு! உ.பி. முதல்வர் ஆதித்யநாத்

அனைவருக்குமான வளர்ச்சியை அடைவதே உத்தரப் பிரதேச அரசின் முதன்மையான இலக்கு என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அனைவருக்குமான வளர்ச்சியே இலக்கு! உ.பி. முதல்வர் ஆதித்யநாத்

அனைவருக்குமான வளர்ச்சியை அடைவதே உத்தரப் பிரதேச அரசின் முதன்மையான இலக்கு என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஜாதி, மதம் மற்றும் பாலினப் பாகுபாடுகளின் அடிப்படையில் மாநில அரசின் செயல்பாடுகள் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஆதித்யநாத்தின் அதிரடியான செயல்பாடுகள் சிறுபான்மையின மக்களை கலக்கத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இத்தகைய கருத்துகளை அவர் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தேசத்தின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஒரு சில நாள்களிலேயே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஆதித்யநாத் மேற்கொண்டார். சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த இறைச்சிக் கூடங்களை மூடுமாறு உத்தரவிட்டது, பெண்களைப் பாதுகாக்கும் வகையில் பாலியல் குற்றத் தடுப்பு காவல் பிரிவை உருவாக்கியது என பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இந்த நடவடிக்கைகளுக்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுத்தன. வருங்காலத்தில் சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிராகவும் அவர் இதுபோன்ற அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என ஊகங்கள் பரவின.
ஆனால், அந்தக் கருத்துகள் பொய்யானவை என எடுத்துரைக்கும் வகையில் யோகி ஆதித்யநாத் சில விஷயங்களை பொதுமக்களிடம் விளக்கியுள்ளார்.
பாராட்டுக் கூட்டம்: முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக, தனது மக்களவைத் தொகுதியான கோரக்பூருக்கு ஆதித்யநாத் சனிக்கிழமை சென்றார். அங்கு அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஆதித்யநாத், மக்களிடம் பேசியதாவது:
முந்தைய ஆட்சிக் காலங்களில் உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அதன் விளைவாக அப்போது மக்களுக்கு எந்தவிதமான பயன்களும் சென்றடையாமல் இருந்தது.
தற்போது மாநிலத்தில் பாஜக ஆட்சி மலர்ந்துள்ளது. அனைவருக்குமான வளர்ச்சியை அடைய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அரசின் திட்டங்களும், பயன்களும் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
சிறுபான்மையினர் நலன்: "அனைவருக்குமான வளர்ச்சி; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையிலே தற்போதைய மாநில அரசு செயல்பட்டு வருகிறது. மதரீதியாகவோ, ஜாதிய ரீதியாகவோ எந்தப் பாகுபாடும் காட்டப்படாது. குறிப்பாக, சிறுபான்மையினர் நலன் காக்கப்படும்.
மாநிலத்தில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியால் இறுமாப்பு கொள்ளக் கூடாது என்றும் சட்டத்தை எவரும் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் பாஜகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், மக்கள் நலனுக்காக மட்டுமே இந்த அரசு செயல்படுமே அன்றி, எந்தத் தரப்பினரையும் திருப்திப்படுத்துவதற்காகச் செயல்படாது.
வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கும் மாநில அரசு முக்கியத்துவம் அளிக்கும். அதேபோன்று பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தீவிரம் காட்டப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் பாலியல் குற்றத் தடுப்பு காவல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதே அந்தப் பிரிவின் பிரதான நோக்கம். அதேவேளையில், பெண்களுடன் வரும் அப்பாவி ஆண்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று போலீஸாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைதிப் பூங்கா: ரெüடிகள் மற்றும் குண்டர்களின் ஆதிக்கத்தை வேரறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைநிறுத்தப்படுவதுடன், அமைதிப் பூங்காவாக உத்தரப் பிரதேசம் உருவெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உள்கட்டமைப்பு மற்றும் சாலைத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச சாலைகளில் குண்டு-குழிகளே இருக்கக் கூடாது என்ற நோக்குடன் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் மாநில பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

கைலாயம் மானசரோவர் யாத்ரீகர்களுக்கு ரூ. 1 லட்சம்

கைலாயம் மானசரோவருக்கு வருடாந்திர யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
அவ்வாறு யாத்திரை மேற்கொள்ளுபவர்கள் இளைப்பாறுவதற்காக அரசு சார்பில் புதிய விடுதி அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். காஜியாபாத் அல்லது நொய்டா பகுதியில் அந்த விடுதியை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர வேறு சில திட்டங்களும் அரசின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறியுள்ள அவர், விரைவில் அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com