பாஜக எம்.பி.க்கள் அனைவரும் இன்று மக்களவை வர பாஜக கொறடா உத்தரவு

சரக்கு சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான 4 துணை மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதால் பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று

புதுதில்லி: சரக்கு சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான 4 துணை மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதால் பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று மக்களவைக்கு வர கொறடா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய சரக்கு-சேவை வரி மசோதா (சிஜிஎஸ்டி),ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் மசோதா ஆகிய 4 மசோதாக்களை அருண் ஜேட்லி மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

இதனிடையே, பாஜக நாடாளுமன்ற எம்.பி.க்களின் கூட்டம் தில்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார், அண்மையில் பாஜகவில் இணைந்த எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜிஎஸ்டி தொடர்பான துணை மசோதாக்கள் குறித்து எம்.பி.க்களிடம் அருண் ஜேட்லி விளக்கினார். நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறை என்பது தான் இதன் சிறப்பம்சம் என்று அவர் கூறினார்.

இந்த மசோதாக்கள் பகிர்ந்தளிக்கப்படும் இறையாண்மையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்று கூறிய ஜேட்லி, அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலில் நடைபெற்ற விரிவான விவாதங்களுக்குப் பிறகே அவை தயாரிக்கப்பட்டன என்றார்.

மேலும், இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறைவேற்றவே அரசு விரும்புவதாக அருண் ஜேட்லி தெரிவித்தார் என்றார் அவர்.

ஜிஎஸ்டி தொடர்பான துணை மசோதாக்களை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்களின் கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி தொடர்பான துணை மசோதாக்களை அவை தற்போதிருக்கும் வடிவில் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேசமயம், வரி சீர்திருத்தங்களை காங்கிரஸ் எதிர்க்காது.

இந்த மசோதாக்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஜிஎஸ்டி தொடர்பான பொதுமக்களின் ஐயப்பாடுகளை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

இந்நிலையில், சரக்கு சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான 4 துணை மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதால் பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று மக்களவைக்கு வர கொறடா உத்தரவிட்டுள்ளார்.

ஜி.எஸ்.டி. மசோதாவில் காங்கிரஸ் திருத்தங்கள் கொண்டுவருவதால் எம்.பி.க்கள் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com