போராட்டத்தை கைவிட விவசாயிகள் மறுப்பு: குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு அறிவிப்பு

தில்லி ஜந்தர்-மந்தரில் கடந்த 15 நாள்களாகப் போராட்டம் நடத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளிக்கும் அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள்
தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளிக்கும் அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள்

தில்லி ஜந்தர்-மந்தரில் கடந்த 15 நாள்களாகப் போராட்டம் நடத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேசிய - தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (உள்துறை), அருண் ஜேட்லி (நிதி), ராதா மோகன் சிங் (வேளாண்) ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இருந்தபோதிலும் 'இச்சந்திப்புகள் மனநிறைவை அளிக்கவில்லை என்பதால் போராட்டம் தொடரும்' என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் தேசிய - தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் சென்று செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தனர்.
அப்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, பயிர் காப்பீட்டுக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக சந்தித்தனர்.
முதலாவதாக ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் ஜந்தர் மந்தருக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேசினர்.
புதுச்சேரி முதல்வர் ஆதரவு: இதேபோல, தில்லிக்கு அரசுமுறைப் பயணமாக வந்த புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி, ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து போராட்டக் குழுவினருடன் சாலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோரை நாராயணசாமி சந்தித்து விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசினார்.
இதற்கிடையே, ஜந்தர் பகுதிக்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணுவுடன் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை வந்து அய்யாக்கண்ணு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பிற்பகலில் அய்யாக்கண்ணு குழுவினரை மத்திய உள்துறை, வேளாண் துறைகளின் அமைச்சர்களைச் சந்திக்க தம்பிதுரை அழைத்துச் சென்றார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவுடன் சந்திக்கும் தமிழக விவசாயிகள்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவுடன் சந்திக்கும் தமிழக விவசாயிகள்.


ஜேட்லி பரிசீலனை: இதேபோல, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அய்யாக்கண்ணு குழுவினர் சந்திக்க மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஏற்பாடு செய்தார். அப்போது, மத்திய நிதியமைச்சக வரம்புக்குள் வரும் பயிர் காப்பீட்டுக்காக விவசாயிகள் செலுத்திய தொகை சுமார் ரூ.8,500 கோடியை திருப்பித் தர வேண்டும்; நிதி நிலை காரணமாக மாநில அரசால் நிறைவேற்ற முடியாத திட்டங்களுக்கு மத்திய அரசு நீண்ட கால கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி சிவா கேட்டுக் கொண்டார். அவற்றை உடனடியாக பரிசீலிப்பதாக அருண் ஜேட்லி உறுதியளித்ததாக திருச்சி சிவா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் திரும்பிய விவசாயிகளை மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, விவசாயிகளை கேரள வேளாண் துறை அமைச்சர் வி.எஸ். சுனில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனில், '120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளமும் தமிழகமும் வறட்சியை சந்தித்து வருகின்றன. எனவே, இந்த விஷயத்தில் தமிழக விவசாயிகளின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம்' என்றார்.
அய்யாக்கண்ணு கருத்து: இந்நிலையில், குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு பேசுகையில், 'தொடக்கத்தில் இருந்த அணுகுமுறையை விட தற்போதைய மத்திய அமைச்சர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது. இருப்பினும், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விஷயத்தில் நாங்கள் எதிர்பார்க்கும் உறுதியை மத்திய அரசு வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு எவ்வித மனநிறைவையும் இச்சந்திப்புகள் தரவில்லை. எனவே, கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்' என்றார்.
களத்தில் தமிழகத் தலைவர்கள்
தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்த தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை முன்னிலையில்
சந்தித்த தமிழக விவசாயிகள்


தம்பிதுரை (மக்களவை துணைத் தலைவர்): விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு துணையாக தமிழக அரசு இருக்கும். எனவே, போராட்டத்தை விவசாயிகள் கைவிட வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மௌனம் காக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக):
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மத்திய அரசும் தமிழக அரசும் வெவ்வேறு வகையில் வஞ்சிக்கின்றன. கூடுதல் கடன் சுமையால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வே.நாராயணசாமி (புதுச்சேரி முதல்வர்): தமிழக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி யானை பசிக்கு சோளப்பொரி அளித்தது போல உள்ளது. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மைத்ரேயன் (அதிமுக-ஓபிஎஸ்):
வறட்சி நிவாரணத்துக்காக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. நாடாளுமன்றத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நாங்கள் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
சோம்நாத் பார்தி (ஏஏபி): பெருநிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசால், ஏன் ஏழை விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியவில்லை. விவசாயிகளின் போராட்டத்துக்கு கடைசி வரை ஆம் ஆத்மி கட்சி துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com