பிஎஸ்3 பற்றி அறிவோம்: இவ்வகை வாகன விற்பனைக்கு ஏப்ரல் 1 முதல் தடை

பிஎஸ்3 வாகனங்களை விற்கவும் பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து அந்த தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களின் விலையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
பிஎஸ்3 பற்றி அறிவோம்: இவ்வகை வாகன விற்பனைக்கு ஏப்ரல் 1 முதல் தடை


சென்னை: பிஎஸ்3 வாகனங்களை விற்கவும் பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து அந்த தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களின் விலையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

பிஎஸ்3 தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, மார்ச் 30 மற்றும் 31ம் தேதிக்குள் விற்பனை செய்து விட வேண்டும் என்ற இலக்குடன், விலைகளில் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் பிஎஸ்3 தான்.  கூகுளில் வெறும் 'w' என்று டைப் செய்ததுமே 'வாட் இஸ் பிஎஸ்3' என்று வரும் அளவுக்கு ஏராளமானோர் இதனை தேடியிருக்கிறார்கள்.

அது பற்றி நாம் தேடியதில் கிடைத்த தகவல்கள்..

பிஎஸ் என்பது பாரத் ஸ்டேஜ் என்பதன் சுருக்கம். மோட்டார் வாகனப் புகை, காற்றை மாசுபடுத்துவதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை உறுதி செய்யும் விதிமுறையின் பெயர் பிஎஸ். ஏற்கனவே பின்பற்றப்பட்ட பிஎஸ் 1 மற்றும் பிஎஸ் 2 ஆகிய நிலைகள் காற்றை அதிகம் மாசுபடுத்தியது. எனவே பிஎஸ் 3 குறைந்தபட்ச காற்று மாசுபடுத்தும் வகையில் தொழில்நுட்பம் என்பதால் இந்தியா உட்பட உலக நாடுகள் அதனை பின்பற்றி வாகனங்களை உற்பத்தி செய்து வந்தன.

இந்தியாவில் 1991ம் ஆண்டுதான் பெட்ரோல் என்ஜின்களுக்கு பிஎஸ்3 சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு டீசல் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக 2005ம் ஆண்டில் அனைத்து இந்திய நகரங்களுக்கும் பிஎஸ்3 சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2010ல் நாடு முழுமைக்கும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

2005ம் ஆண்டில் முக்கிய நகரங்களுக்கு பிஎஸ்3 தொழில்நுட்பத்தை நாம் கொண்டு வந்த போது, உலக நாடுகள் பலவும் 4, 5 என உயர்ந்து 2014ல் 6ம் நிலையை எட்டிவிட்டன. அதாவது, உலக நாடுகள், காற்று மாசுவைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றி வந்த போது, நாமோ பழைய பிஎஸ் 3 என்ற நிலையிலேயே தொடர்ந்து நீடித்தோம்.

2016ம் ஆண்டு இறுதியிலேயே, இந்தியாவிலும் சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் பிஎஸ்4 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

இது குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, பிஎஸ்3 கோட்பாடுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததோடு, வணிக ரீதியான நடவடிக்கைகளை விட, மக்களின் ஆரோக்கியமே முக்கியம் என்றும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் தொழில்நுட்பங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயாரிப்பின் போதே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதோடு, பிஎஸ்3 தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்யவும் பதிவு செய்யவும்  தடை விதிப்பதாக அறிவித்தது.

இந்த உத்தரவு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டதால், பிஎஸ்3 குறித்த குழப்பம் ஒரு வழியாக தீர்வுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com