சொத்து வரி செலுத்தாதோர் பட்டியலில் தாஜ் பேலஸ், தில்லி கோல்ஃப் கிளப் உள்ளிட்ட 11 நட்சத்திர உணவகங்கள்!

தாஜ் பேலஸ், தில்லி கோல்ஃப் கிளப் உள்ளிட்ட தில்லியின் பல்வேறு 11 நட்சத்திர உணவகங்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்து வரி செலுத்தாமல்
சொத்து வரி செலுத்தாதோர் பட்டியலில் தாஜ் பேலஸ், தில்லி கோல்ஃப் கிளப் உள்ளிட்ட 11 நட்சத்திர உணவகங்கள்!

புது தில்லி: தாஜ் பேலஸ், தில்லி கோல்ஃப் கிளப் உள்ளிட்ட தில்லியின் பல்வேறு 11 நட்சத்திர உணவகங்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்து வரி செலுத்தாமல் இருப்பதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தெரிவித்துள்ளது.

2016-17 நிதியாண்டின் இறுதி அறிக்கை அறிக்கை ஒன்றை என்டிஎம்சி தயாரித்துள்ளது. இதில் கிடைத்துள்ள தகவலின் படி, குறைந்தபட்சம் 11 ஐந்து நட்சத்திர உணவகங்கள் மொத்தமாக சுமார் ரூ.320 கோடி அளவுக்கு சொத்து வரி நிலுவை வைத்துள்ளன.

அத்துடன், 166 நிறுவனங்கள் கடந்த 4 ஆண்டுகளாக ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேலாக சொத்து வரி செலுத்தாமல் இருந்து வருகின்றன.

தில்லி கோல்ஃப் கிளப் தான் இருப்பதிலேயே மிக அதிகமாக ரூ.700 கோடி அளவுக்கு சொத்து வரி நிலுவை வைத்துள்ளது. தாஜ் பேலஸ் ஹோட்டல் ரூ.42 கோடி, தி லீலா ரூ.18 கோடி, கிளாரிட்ஜஸ் ரூ.4 கோடி, ஹோட்டல் ஸ்மார்ட் ரூ.31 கோடி, ஐடிசி மெளரியா ஷெரட்டன் ரூ.2 கோடி சொத்து வரி செலுத்தாமல் உள்ளன.

அசோக் யாத்ரி நிவாஸ் ரூ.10 கோடி, ஜன்பத் ரூ.26 கோடி, இம்பீரியல் ரூ.55 கோடி, தி பார்க் ரூ.18 கோடி, ஹோட்டல் அம்பாசிடர் ரூ.12 கோடி வரி நிலுவை வைத்துள்ளன. வழக்கமான நடைமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவை தங்களது வரி நிலுவையை செலுத்தாத பட்சத்தில் என்டிஎம்சி அவற்றின் சொத்துகளை முடக்க முடியும். எனினும், சம்பந்தப்பட்ட அனைத்து ஹோட்டல்களும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அத்துடன், வழக்கு விசாரணை முடியும் வரையில் என்டிஎம்சி மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, நடப்பு தேதி வரையில் வரிகள் யாவும் உரிய முறையில் செலுத்தப்பட்டு வருவதாக தாஜ் பேலஸ் மற்றும் கிளாரிட்ஜஸ் ஹோட்டல்களின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரி நிலுவை கணக்கீட்டில் இருக்கும் பல்வேறு விவகாரங்கள் காரணமாகவே பல நூறு கோடி ரூபாய் நிலுவை உள்ளதாக கூறப்படுவதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும் தில்லி கோல்ஃப் கிளப் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

என்டிஎம்சி பகுதியில் உள்ள 7,000 சொத்துகளில் சுமார் 350 சொத்துகள் ஹோட்டல்கள், கிளப்புகள், மத்திய அரசுக்கு சொந்தமான கட்டடங்களாகும். என்டிஎம்சி, 2016-17 நிதியாண்டில் ரூ.577 கோடி சொத்து வரியாக வசூல் செய்துள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.98 கோடி அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com